சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்றையதினம் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டு பிடித்துத் தருமாறு கோரியும், இலங்கை மீது சர்வதேச விசாரணையே வேண்டுமென வலியுறுத்தியும் நேற்றையதினம் வடக்கு – கிழக்கு எங்கிலும் கண்டனப் பேரணி மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள் என்பன இடம் பெற்றுள்ளன.
முன்னதாக காலை பத்து மணியளவில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த பேரணி பன்னிரண்டு மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை வந்தடைந்து, அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர்செய்யிட் ராட் அல் ஹீசைன், மகஜரின் பிரதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐ.நா. பணிக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் ஆகியோருக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கில் இலட்சக்கணகானவர்கள் யுத்தத்தின் போதும் இராணுவத்தினரால் கடத்தப்பட்டும் காணமல் போயுள்ளனர். எனினும் இலங்கையில் தொடந்து வரும் ஆட்சியாளர்கள் இவர்கள் எங்கு இப்போது உள்ளனர்? அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கூறுவதற்கு மறுத்து வருகின்றனர். மாறாக பொய்யான அலுவலகங்களை நிறுவியும்,
ஆணைக்குழுக்களை நிறுவியும் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர். தற்போது நல்லாட்சி என கூறிக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்களும் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்து கொள்ள சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். தற்போது நாங்கள் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உள்ளோம். எனவே தான் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சர்வதேசமே இலங்கை அரசிடமிருந்து ஒரு நீதியை எமக்கு பெற்றுத்தர கோரியும் இந்த பேரணியில் ஈடுபட்டுள்ளோம் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்திருமதி சுபாஜினி கிசோ அன்ரன் தெரிவித்தனர்.
இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?, சர்வாதேச விசாரணையே எமக்கு வேண்டும். உள்ளக விசாரணை எமக்கு தீர்வை தராது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொருப்புக்கூரலை ஏற்படுத்து, தொடர்ந்தும் எம்மை ஏமாற்றாதே, சர்வதேசமே இலங்கை அரசின் நாடகத்தை நம்பாதே என எழுதப்பட்ட பதாகைகளை இப்போரட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.
இபோராட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார்,வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள்,படுகொலைகளுக்கும்வன்முறைகளுக்கும் உள்ளானோரின் குடும்ப உறவுகள்,கிராமிய பெண்கள் அமைப்புகள், கிராமிய சமூக அமைப்புகள்,சிவில் சமூக அமைப்புகள் உட்பட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.