பாரிஸ் நகர மையத்தில் லாசப்பலில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர் பவனி இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் பலத்த பாதுகாப்பின் மத்தியில் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட தேர்பவனியை மாநகர காவல் படையினருடன் இணைந்து ஆயுதம் தாங்கிய தேசிய பொலிஸ் விசேட பிரிவினரும் (CRS) கண்காணித்தனர்.
வழமையாக தேர்செல்லும் வீதிகள் பாதுகாப்புக்காரணங்களால் குறைக்கப்பட்டு லாசப்பல் பிரதேசத்தை ஊடறுத்துச்செல்லும் இரண்டு பிரதானவீதிகளில் மட்டும் தேர் பவனி இடம்பெற்றது.தேர் செ…ன்ற பிரதான வீதிகளோடு இணையும் உப வீதிகளை CRS எனப்படும் தேசிய பொலிஸ் படையின் குடியரசுக் காவலர்கள் தங்கள் வாகனங்களால் மறித்தவாறு நின்று கண்காணித்தனர்.
பிரான்ஸில் தொடரும் பயங்கரவாதத் தாக்குதல்களால் பல நகரங்களிலும் ஆண்டு தோறும் நடைபெறும் கோடைகால விழாக்களும் பண்பாட்டு மற்றும் களியாட்ட வைபவங்களும் இரத்துச்செய்யப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடிய இன்றைய தேர் திருவிழாவுக்கு பாரிஸ் மாநகர நிர்வாகம் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் நகர மக்களால் அதன் முக்கிய ஆசிய கலாசாரக் கொண்டாட்டமாகப் பார்க்கப்படும் இந்த திருவிழாவில் ஜரோப்பா வாழ் இந்துக்கள் உட்பட வெளிநாட்டவர்கள் திரண்டுவந்து. பங்கேற்பது வழக்கம்.பாதுகாப்பு காரணங்களால் இந்தத்தடவை அந்த எண்ணிக்கை சற்றுக்குறைவாகத் தென்பட்டது.