சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 8 பொலிஸாரை கைது செய்து, வழக்கு தொடர சட்டா மா அதிபர் திணைக்களம் பணித்துள்ளது. யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நேற்றைய தினம் இந்த தகவலை நீதிமன்றில் கூறியுள்ளார்.
திருட்டுக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்று, மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில், கடந்த மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, இந்த வழக்கின் சந்தேக நபர்களான 4 பேர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் குறித்த கொலை சம்பவத்தை வெளிப்படுத்தி இருந்ததோடு,
தமது வாக்கு மூலத்தில், வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு, 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி புத்தகப்பைகளை அன்பளிப்புச் செய்தோம். அவ்வேளை அங்கு வந்த சுன்னாகம் பொலிஸார், மாவீரர் தினத்தை முன்னிட்டு இதனை வழங்குகின்றீர்களா எனக் கேட்ட னர். அதற்கு நாம் இல்லை, வறிய மாணவ ர்கள் கல்வியைத் தொடர்வதற்காக உதவுகின்றோம் என்றோம். அதன் பின்னர் பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.
தொடர்ந்து, அன்றைய தினம் இரவு எங்கள் ஐந்து பேரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். ஏன் எங்களைக் கைது செய்தீர்கள்? எனக் கேட்டபோது, திருட்டுக்குற்றச்சாட்டு என்று கூறினர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தினுள் சித்திரவதை செய்வதற்கென பிரத்தியேக அறை ஒன்று உள்ளது. அந்த அறை க்குள் எம்மை அழைத்து சென்றனர். அங்கு ஊரெழு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுத் துறையினர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று தமிழ் பொலிஸ் உத்தி யோகத்தர்கள் மற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர், எம்மீது சித்திரவதைகளைப் புரியத் தொடங்கினர்.
எம்மீது மின்சாரத்தை பாய்ச்சினார்கள்; கால் பாதங்களில் ஆணிகளை அடித்தார்கள் கைப் பெருவிரலில் குழாய் ஒன்றினை நுழைத்து, அந்த குழாயை மேலே தூக்கிக் கட்டினார்கள். அதன்போது எமது முழு உடல் பாரமும் விரலிலேயே தூங்கியது. மேசைக்கு குறுக்கே கை, கால்களை இழுத்துக் கட்டி தாக்கினார்கள்.
இவ்வாறு மிக மோசமான சித்திரவதைகளை சுன்னாகம் பொலிஸார், எம்மீது மேற்கொண்டனர். இதன் போது எமது நண்பனான சுமன் என்பவரை இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி வைத்து உனக்குத் தனி நாடு வேணுமா என கேட்டுத் தாக்கினார்கள். பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலால் நண்பனின் வாய் மற்றும் மூக்கில் இரத்தம் சொட்டி நண்பன் உயிரிழந்து விட்டான். அதனை அடுத்து எம்மை அந்த அறையில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்தி விட்டனர்.
பின்னர், உயிரிழந்த எமது நண்பனின் உடலை கிளிநொச்சி, இரணைமடு குளத்தினுள் வீசியுள்ளனர். பின்னர் நண்பன் குளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டதாக மரணச்சான்றிதழ் கொடுத்து, பொலிஸார் அத னைத் தற்கொலையாக மாற்றிவிட்டனர் என தமது வாக்கு மூலத்தில் கூறியிருந்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக மன்றில் முன்னிலையாகியிருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் சட்டமா அதிபரால் தமக்கு கிடைக்கப்பட்டிருந்த அறிவுறுத்தலை மன்றில் முன்வைத்திருந்தார்.
இதன்பிரகாரம் குறித்த விடயம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட எண்மரையும் கைது செய்து அவர்களுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றிலும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றிலும் வழக்கு தொடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்தார்.
குறிப்பாக எண்மரில் ஐவருக்கு எதிராக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் கொலை குற்றச்சாட்டு தொட ர்பான வழக்கும் தாக்கல் செய்யவும் மற்றும் மூவருக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டு தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவும் சட்ட மா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தர விட்டது.