கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் ஆகிய மூவரும் உணவில் விஷம் கலந்தமையாலேயே உயிரிழந்திருப்பதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
புனித பெனடிக் வீதியைச் சேர்ந்த வாசுதேவன் சிவகுமார் (46), சிவகுமார் கதர்ஷனி (12), சிவகுமார் நவீத்ரன் (09)ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள சிறுமி கதர்ஷனி பம்பலப்பிட்டி இராமநாதன் கல்லூரியிலும், சிறுவன் கவின்சன் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்கும் மாணவர்களென்றும் கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (19.08.2016 ) காலை 8.30 தொடக்கம் 10.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்திற்குள் இடம்பெற்றிருக்க வேண்டுமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவதினம் காலை மனைவி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அவர் மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டில் அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் மயக்கமுற்ற நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளனர்.
அவர்கள் விஷம் அருந்தியதனாலேயே மயக்கமுற்றிருப்பதனை அறிந்து கொண்ட மனைவி உடனடியாக மூவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவில் கொண்டு சேர்த்துள்ளார்.
குற்றுயிருடன் அனுமதிக்கப்பட்ட மூவரினதும் உயிரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டபோதும் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர்.
விஷம் அருந்தியதன் காரணமாகவே மூவரும் உயிரிழந்திருப்பதனை வைத்தியர்கள் ஊர்ஜிதம் செய்திருப்பதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவடையும் வரை எதனையும் திட்டவட்டமாக கூற முடியாததனால் சந்தேகத்தின் பேரில் எவரையும் இதுவரை கைதுசெய்யவில்லையென நேற்று(19) மாலையளவில் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தற்கொலையா? அல்லது தவறுதலாக நஞ்சு அருந்தியதனால் இடம்பெற்ற மரணமா? அல்லது திட்டமிட்டு எவரும் செய்த கொலையா? என்ற எந்தவொரு தீர்மானத்துக்கும் நேற்று மாலை வரை வரமுடியாத நிலையில் கொட்டாஞ்சேனை பொலிஸார் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் பொலிஸார் நடாத்திய தேடுதலில் சந்தேகத்திற்கிடமான எவ்வித தடயங்களும் கிடைத்திருக்கவில்லை.சம்பவத்தில் உயிரிழந்த தந்தை வெளியிலிருந்தே அன்றைய தினம் காலை உணவை வாங்கி வந்திருப்பதாக தெரியவருகிறது.இவரது மகன் நாளை நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதனால் பெற்றாருக்காக பாடசாலையில் நடாத்தப்பட்ட செயலமர்வில் கலந்து கொள்வதற்காக மனைவி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பி வந்தவேளையிலே வீட்டில் இவர்கள் குற்றுயிராகக் கிடப்பதை அவதானித்துள்ளார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதனால் இவர்கள் உட்கொண்ட உணவுகளின் மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.