இலங்கையில் இன விவகாரத்துக்குத் தீர்வு காணவேண்டும் என்பது ஒருபுறம்; நாட்டை அபிவிருத்தி நிலைக்கு கொண்டு செல்லுதல் என்பது மறுபுறமாக இலங்கையின் எதிர்கால பயணம் இருக்க வேண்டும்.
சுருங்கக்கூறின் சகல இனங்களுக்கும் சம உரிமை என்பதும் நாட்டின் அபிவிருத்தி என்பதும் சமாந்திர பாதையில் பயணிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.இருந்தும் இதுபற்றி எவரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
மாறாக இலங்கை பெளத்த சிங்கள நாடு. இது ஒன்றே இந்த நாட்டிற்குப் போதும் என்பது போல பெரும்பான்மையினர் நடந்து கொள்கின்றனர்.
இலங்கையை பெளத்த சிங்கள நாடு என்று சொல்வதன் மூலம் இலங்கையின் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்தும் தானாக வந்து கிடைக்கும் என்பது போல நிலைமையுள்ளது.
இதற்காக இலங்கையின் அனைத்துப் பாகத்திலும் பெளத்த விகாரைகளை அமைத்து விடுவதில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது.
குறிப்பாக தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகளை அமைத்து விட்டால் இங்கும் சிங்களவர்கள் வாழ்ந்தவர்கள் என வரலாற்றை மாற்றி எழுதலாம் என்பது அவர்களின் நோக்காக உள்ளது.
தமிழர் வாழ்விடங்களில் புத்த விகாரைகளை அமைத்து விட்டு சில வருடங்கள் கடந்து போக இந்த விகாரைகளை மகிந்த தேரர் அமைத்தார், தேவநம்பியதீசன் கட்டுவித்தான் என்று கதைவிடலாம் என்பதுதான் நோக்கமாகும்.
பொதுவில் மதத்தலங்கள் வழிபாட்டுக்கும் தான தர்மத்துக்குமான இடங்களாகவே முன்பு கருதப்பட்டது.
ஆனால் இன்று மதத்தலங்கள் வழிபடுவோரின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.
நிலைமை இதுவாக இருந்த போதிலும் பெளத்த விகாரைகளை தமிழர் தாயகத்தில் அமைப்பதன் மூலம் சிங்கள மக்களின் வாழ்விடங்கள் தமிழர் வாழும் பகுதிகளிலும் இருந்தது என்பதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டதாகும்.
உலகம் முழுவதிலும் கடன் கேட்டு, கையேந்தி நிற்கக்கூடிய ஒரு நாடு; தனது பொருளாதார முன் னேற்றம், அபிவிருத்தி என்பன குறித்துச் சிந்திக்காமல் பெளத்த விகாரைகளை கட்டுவிப்பதிலேயே காலத்தை வீணாக்கினால் எதிர்காலத்தில் இலங்கை மக்கள் மனிதரைப் பிடித்து உண்ணும் நிலைமைக்குத் தள்ளப்படுவர்.
பெளத்த விகாரைகளை அமைத்த நிலங்களையும் அப்பகுதிகளையும் பெளத்த பிரதேசமாக அடை யாளப்படுத்தும் நிகழ்ச்சி நிரலில் வேறு சில மதங்களும் ஈடுபட்டிருப்பதைக் காணமுடிகின்றது.
இவ்வாறு மத வழிபாட்டுத் தலங்களை எங்கும் அமைத்துவிட்டு என்னதான் செய்யப் போகிறீர்கள் என்று கேட்பதற்கு இந்த நாட்டில் எவருமில்லை என்றாயிற்று.
பெளத்த மதம் மட்டுமன்றி பிறநாட்டில் இருந்து நம்நாட்டிற்குள் உள்நுழையும் சில அமைப்புகளும் மத மாற்றம் செய்வதையும் அதற்காக மதத்தலங்களை நிறுவுவதையும் காணமுடிகின்றது.
இப்படியே நிலைமை சென்றால் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் மத அடையாளங்கள் குவிந்து நெருக்கடியாகக் காணப்படும் என்பதுடன், மக்கள் வறுமையில் வாழுகின்ற கொடுமையும் நடக்கும் என்பது திண்ணம்.
-வலம்புரி.