இனந்தெரியாத நபர்கள் வீடு புகு ந்து வாளால் வெட்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே வேறு சிலருடன் சேர்ந்து இக்கொலையை செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் சங்குவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 30) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் குடும்பஸ்தருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாகவும் இதன் காரணமாகவே குறித்த குடும்பஸ்தர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அயலவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு குறித்த குடும்பஸ்தருடைய வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்கள் குழு ஒன்று குடும்பஸ்தர் மீது சரமாரியாக வாள்வெட்டு நடத்தியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த அவர் உற வினர்களினால் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தரை வெட்டினார் என சந்தேகிக்கப்படும் இளைஞர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் பொலிஸார் மீதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் எனவும் சந்தேகத்துக்குரிய நபரை பொலிஸார் தேடுதல் நடத்திய போதும், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரஸ்தாப குடும்பஸ்தரின் வீட்டிற்குள் புகுந்து குடும்பஸ்தரை வெட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சமூகவிரோத இளைஞர் கிளிநொச்சி மாவட்டத்தில் தலைமறைவாகி இருக்கின்றார் என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றும் பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளவில்லை என்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியதுடன், பொலிஸாரில் சிலரின் ஒத்துழைப்பில் தான் குறித்த நபர் தலைமறைவாகியிருந்து இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என குறிப்பிட்டுள்ளனர்.