காணாமல் போனோர் தொடர்பில் கேள்வி எழுப்புங்கள் என பாப்பரசரிடம் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

0
768

காணாமல் போனோர் தொடர்பில் பாப்பரசர் கவனம் செலுத்தி கேள்வி எழுப்பங்கள் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று  இடம்பெற்றது.

காணாமல் போனோரின் உறவுகளை ஒன்றிணைத்து வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவுகள் பலர் கலந்து கொண்டு அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

unnamed-107

இதன் போது அவர்கள் திருத்தந்தையே அடிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது கருணை காட்டுங்கள் எங்கள் இன விடுதலைக்கு ஆசீர்வதியுங்கள், திருத்தந்தையே எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு பரிகார நீதியை பெற்றுத்தாருங்கள், திருத்தந்தையே அடிமைத்தமிழ் மக்களுக்கு சிங்களஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுதலையை பெற்றுத்தாருங்கள், அதி வணக்கத்திற்குரிய திருத்தந்தையே தடுப்பு காவலில் உள்ள எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள், திருத்தந்தையே உங்கள் பாதம் பதியும் இடம் புனிதமாக இருக்க வேண்டும்.

அங்கு இனப்படுகொலையும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளது, கடத்தப்பட்டு காணாமல்போன பிள்ளைகளை தேடி அலைகின்றோம் எங்களுக்கு ஆறுதல் தாருங்கள் தந்தையே, இறுதிப்போரில் காணாமல் போன எங்கள் கணவன்மார் மற்றும் பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்துங்கள் கேள்வி எழுப்புங்கள் என பதாதைகளை தாங்கியிருந்தனர்.

unnamed-1112

இதனையடுத்து அவர்கள் மடு திருத்தலத்திற்கான தமது பயணத்தை மேற்கொண்டனர்.

பாப்பரசர் இலங்கை வந்துள்ள நிலையினில் காணாமல் போனோர் விவகாரத்தை சர்வதேச மயப்படுத்த அவர்களது குடும்பங்கள் முற்பட்டுள்ளன. ஆதற்கேதுவாக அவரை சந்திப்பதற்கான நடவடிக்கையில் காணாமல் போனோரின் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை மடுத்திருப்பதிக்கு விஜயம் செய்கையில், அவரைச் சந்தித்து, காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோருவதற்காக போரின்போதும் அதன் பின்னரும் காணாமல் போயுள்ளவர்களின் குடும்பத்தினர் வவுனியாவில் இருந்து மடுவுக்குப் புறப்பட்டுச்சென்றுள்ளனர்.

unnamed-1210
காணாமல் போயிருப்பவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு பல்வேறு தடவைகள் இலங்கை அரசிடமும், முன்னாள் ஜனாதிபதியிடமும் தாங்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் எதுவித பயனும் இன்னும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடமும் தாங்கள் தமது கோரிக்கையை முன்வைத்ததாகவும், ஆயினும் பயனேதும் ஏற்படாத நிலையில், இலங்கை வந்துள்ள பாப்பரசரிடம் தமது கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை புதன்கிழமை பிற்பகல் 2.30 அளவினில் மடுத்திருப்பதிக்கு விசேட உலங்கு வானூர்தி மூலமாக வருகை தரவுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள், அங்கு நடைபெறும் விசேட பூஜையில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here