2000 தொடக்கத்தில் பட்டாம்பூச்சி விற்பவனாய் அறிமுகமான எனது சகோதர நண்பா…
உன் உடல் பார்த்த போது
உனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது என்றார்கள்…
சிலர் கல்லீரல் நோய் என்றார்கள்…
சிலர் இன்று காலை மாரடைப்பு நோய் தாக்கியது என்றார்கள்… …
ஒருவர் கூட உனது மரணத்திற்கு “குடி நோய்தான்” காரணம் என்று சொல்லவில்லை.
இரண்டு முறை தேசிய விருதினை வென்றவன் நீ…
இருந்திருந்தால் இன்னும் பத்து முறைக்கு மேல் வெல்லக்கூடிய ஆற்றல் படைத்தவன் நீ…
“வெல்வது உறுதி” என்கிற பத்து ஈழ எழுச்சிப்பாடல் தொகுப்பிற்காக உன்னிடமும் ஒரு பாடல் கேட்டிருந்தேன்.
சிலநாள் கடந்து ஒரு நாள் அழைத்தாய்…
வெற்றுத்தாளையும் எழுதுகோலையும் எடுத்து நீட்டி நான் சொல்ல சொல்ல எழுதுங்கள் அண்ணா என்றாய்…
அருவிபோல் கொட்டியது உன் வாயிலிருந்து தமிழ்…
அன்புள்ள தோழனுக்கு உன் தோழி எழுதுவது… என்கிற அந்த அற்புத பாடலை இப்போதும் நீங்கள் இணையத்தில் கேட்கலாம்…
பிறகுதான் பலர் சொன்னார்கள் கண்ணதாசனுக்கு பிறகு மெட்டை கேட்டவுடன் பாட்டை கொட்டுந்திறன் முத்துவிற்கும் உண்டு என்று.
ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்ல வில்லை…
பழகிய இந்த பதினாறு ஆண்டுகளில் தொடக்கத்தில் காட்டிய அதே அன்பையும் அதே பாசத்தையும் உச்சம் தொட்டப்பிறகும் உண்மையாக பழகியவன் நீ…
எனது அன்பு நண்பனே…
பாசமுள்ள சகோதரனே…
உன்னை பிரிந்து கலங்குவதும்
கதறுவதும் நிர்கதியாய் நிற்கிற உனது மனைவி, ஒன்பது வயது மகன், ஆறுமாத பெண் குழந்தை மட்டுமல்ல.. .
இந்த தமிழ் சமூகமுந்தான்…
குடியால்… காலத்தால் வெல்லமுடியாத காவியங்களை தமிழுக்குத்தந்த கண்ணதாசனை இழந்தோம்…
இப்போது உன்னையும் இழந்து நிற்திறோம்…
இன்று சுதந்திர தினமாம்…
எல்லாம் சரி… இந்த குடியிலிருந்து எம் தமிழ் மண்ணிற்கு என்று சுதந்திரம் கிடைக்கும்?.
வ.கெளதமன் .