சுவிட்சர்லாந்து நாட்டில் கோடை விடுமுறையை கழிக்க பிரித்தானிய பிரதமரான தெரசா மே பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரசா மே தனது கோடை விடுமுறையை கழிக்க தனது கணவரான ஃபிலிப்புடன் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியுள்ளார்.
முன்னாள் பிரித்தானிய பிரதமரான மார்க்கரெட் தாட்சர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன் முதலாக தெரசா மே பிரதமராக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல சுவிட்சர்லாந்து ஒரு மிகச்சிறந்த நாடு எனவும், அங்குள்ள ஆல்ப்ஸ் மலைகளில் நடந்து செல்வது பிடித்தமான பொழுபோக்கு என தெரசா மே தெரிவித்துள்ளார்.
சுவிஸில் சுற்றுலா செல்ல யூன் சிறந்த மாதமாக இருந்தாலும், பல்வேறு அலுவலக காரணங்களுக்காக தெரசா மே ஆகஸ்ட் மாதத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், சுவிஸ் மலைப்பகுதியில் தெரசா மே தங்கியிருந்தாலும், அவசர காலத்திலும் அவரை உடனடியாக தொடர்புக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் தெரசா மே இரண்டு வாரங்கள் விடுமுறையை கழித்து விட்டு பிரித்தானியா திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.