போர்க் காலத்தில் பெண்கள் இரவு நேரங்களில் கூட சுதந்திரமாக நடமாடிய நிலையில் இப்பொழுது பகலில்கூட சுதந்திரமாக அச்சமின்றி நடமாட முடியாத சூழல் உருவாகியுள்ளது என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
மாகாண மட்டத்திலான பொலிஸ் – பொது மக்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போதே அங்கு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பொலிஸ் சேவை என்பது முன்னைய நிலையில் இருந்து விலகிப்புதிய பரிமாணம் பெற்று அது பொது மக்களுடன் பின்னிப்பிணைந்த ஒரு சேவையாக மாற்றப்பட்டிருப்பது ஒரு முன்னேற்றமான செயற்பாடு. எமது நாட்டின் பாதுகாப்புப் பகுதியின் மறுசீரமைப்பு இன்று முக்கியமானது ஒன்றாக உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் கருதப்படுகின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளாகக் கூடிய வலுக்குறைந்த சமூகப் பிரிவுகள் வலுப்பெற நாங்கள் பாடுபட வேண்டும். இதனால்தான் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பங்காளர் கூட்டணி சகல மட்டங்களிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று எண்ணப்பட்டது.
முன்பிருந்த விழிப்புக்குழுக்கள் அரசியல் கட்சிகள் சார்பான பாதிப்புக்கு உள்ளானதால் கட்சிகளைத் தவிர்த்து மக்கள் தலைவர்களையும் பொலிஸாரையும் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாவது அவசியம் என்று கருதப்பட்டது. பொலிஸ் – பொதுமக்களின் உறவுநிலை இன்னும் திருப்திகரமாக அமையாமையால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களினால் ஒருவரை ஒருவர் புரிந்து மக்கள் பாதுகாப்பில் இனி இணைந்தே ஈடுபடலாம் என்று கருதினோம்.
இப் பகுதியில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் குற்றச் செயல்கள் மிக அதிகரித்திருப்பது எம்மையும் பொலிஸ் சேவையையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியு ள்ளது. களவு, கொலை, கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் காண்கின்றோம்.
அது மட்டுமல்ல, வடமாகாணம் கஞ்சா விற்பனையின் மத்திய நிலையமாக மாறியிருப்பதும் மிகவும் வெறுப்பையும் வேதனையை யும் தருகின்றன. பொலிஸார் பல கடத்தற் செயற்பாடுகளை முறியடி க்கின்ற போதும் இச் செயற்பாடுகள் தொடர்கின்றன என்றால் இதன் பின்னணி என்ன?
இரவு நேர காவல்களுக்கும் நடமாடும் சேவைகளுக்கும் என அதிகளவில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும் அவர்களின் சேவை இன்னமும் திருப்தி தருவதாக அமையவில்லை என்றே கருதுகின்றேன்.
எமது காவல் நடவடிக்கைகளில் பல ஓட்டைகள் இருப்ப தாக எண்ணத் தோன்றுகின்றது. இத்துவாரங்கள் அடைக்கப்படல் வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் வட மாகாணசபை அவைத்தலைவர், வடக்கு அமைச்சர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், வடமாகாண பிரதம செயலாளர், பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், சிறைச்சாலை ஆணையாளர், சிறுவர் நன்னடத்தை ஆணையாளர், சமூகசேவை ஆணையாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.