மல்லாகம் கோட்டைக்காடு முருகன் கோவிலடி பகுதியில் நேற்றைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் சிவசங்கரன்( வயது 48) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தொடருந்து மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பிரஸ்தாப நபருக்கு கேட்கும் திறன் குறைவு என கூறும் உறவினர்கள், தொடருந்து கடவையில் சமிக்ஞை ஒலித்தபோதும் அதனை கேட்க முடியாத நிலையிலேயே கடவையை கடந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அப்பகுதி மக்கள் தமது பகுதிக்கு தொடருந்து பாதுகாப்பு கடவை இல்லாமையினை எதிர்த்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். இந்நிலையில் அங்கு வந்த சுன்னாகம் பொலிஸார் தொடருந்து கடவை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரையில் குறித்த கடவைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் பார்க்க.கஜதீபனும் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோடு கலந்துரையாடினார். இதனையடுத்து நிலமை கட்டுக்குள் வந்தது.