தமிழ் மக்களின் மனங்கள் வெல்லப்படாத வரை நல்லிணக்கம் சாத்தியப்படப் போவதில்லை. அத்தோடு சிங்கள மேட்டிமைவாத போக்கும் உள்ளவரை நல்லிணக்கம் என்பது வெறும் கானல்நீர்தான் என தெரி வித்துள்ள மன்னார் மாவட்ட பொது மக்களின் ஒன்றியம், முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்பில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.
இது தொடர்பில் மன்னார் மாவட்ட பொதுமக்கள் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் போராளிகளின் தொடர்ச்சியான உயிரிழப்பு பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. கடந்த காலத்தில் அரசாங்கத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு பதினோராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களுள் சிலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். அதிலும் புற்றுநோய் காரணமாகவே உயிரிழப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. அத்தோடு தமக்கு இரசாயன உணவும் சந்தேகத் திற்கிடமான மருந்தும் ஏற்றியதாக புனர்வாழ்வில் இருந்து விடுதலையான முன்னாள் போராளிகள் சிலர் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்கள்.
எனவே பொது மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் இது மிகமோசமான அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு இவ்வாறான மரண பயம் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இவர்களது எதிர்காலம் கேள்விக் குறிக்குள்ளாகியுள்ளது.
எனவே இவர்களுடைய அச்சத்தை போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனை வருக்கும் தகுந்த தரம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் தார்மிகக் கடமையும் பொறுப்பும் ஆகும். ஆனால் வழமைபோல் இதனையும் அரசியலாக புறம்தள்ளி விடாதீர்கள். எனவே இவ்வாறான நிலை கட்டமைக்கப்பட இன அழிப்பின் ஓர் வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது.
வெறுமனே நல்லாட்சி அரசாங்கம் என நீங்களே உங்களுக்குள் கூறிக் கொள்வதை விடுத்து கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ்மக்கள் திருப்தியடையக் கூடிய வகையில் எந்த விதமான ஆக்கபூர்வமான நல்லெண்ண முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுபற்றி சிந்தியுங்கள். தமிழ் மக்களால் நம்பிக்கையுடன் ஏற் படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்திலும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
இவ்வாறாக தமிழர்களின் மனங்கள் வெல்லப்படாத நிலைமை தொடருமாயின் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. இவற்றுடன் சிங்கள மேட்டிமைவாத போக்கு உள்ளவரை நல்லிணக்கம் என்பது கானல்நீர்தான்.
இவற்றை ஏன் ஆட்சியிலுள்ள நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் இல்லை என்பதே வேதனையுள்ளது.
எனவே முன்னாள் போராளிகளின் அச்சத்தினை போக்க அரசாங்கம் வழிவகுக்கும் என நம்புகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.