காணி அபகரிப்போடு கோவில்களும் இடிக்கப்படுகின்றது!

0
606

imageநல்லிணப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் வலயமட்டச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு, நேற்று முன்தினம் யாழ் வேலணைப் பகுதியில் இடம்பெற்றபோது, அந் நிகழ்வில் வெறுமனே 6 பேர் மாத்திரமே தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் ஆனாலும் நேற்றைய அமர்வுகளில், அதிகமான ஆர்வம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த அமர்வில் கலந்துகொண்டவர்கள், பொறுப்புக்கூறுதல், காணாமற்போனமை, உண்மையைக் கண்டறிதல், இழப்பீடு வழங்குதல் தொடர்பான தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தபொழுது, மொழிப் பிரச்சினையென்பது முக்கியமானதாகச் சுட்டிக் காட்டப்பட்டது.

பொலிஸிலும் இராணுவத்திலும் காணப்படும் பலரால், தமிழில் உரையாற்ற முடியாது இன் நிலையில், அவ்விடங்களில் வசிப்பவர்களால் சிங்கள மொழியில் உரையாட முடியாது என, அதன்போது கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

வடக்கின் பெரும்பாலான பகுதிகளில், காணி அபகரிப்புத் தொடர்வதாகத் தெரிவித்த மக்கள், இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் பௌத்த விகாரைகள், இராணுவத்தினரால் கட்டப்பட்டுவருவதாகவும் முறையிட்டனர். வெலிஓயா பகுதியில், இராணுவத்தினரால் இன்னமும் காணிகள், நில ஆக்கிரமிப்புத் தொடர்வதாகவும் அதன் காரணமாக, மீளத் திரும்புவதிலும் வாழ்வாதாரத்திலும் மிகுந்த சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அத்தோடு, ஏனைய இனங்கள், தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியுமானால், தமிழ் மக்களால் ஏன் திரும்ப முடியாது என்றும் கேள்வியெழுப்பப்பட்டது.

இதன்போது கலந்துகொண்ட சாட்சிகளில் சிலர், இறுதிப் போரில் இடம்பெற்ற பாரிய அழிவுகளைப் பற்றிய தங்களது அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, தங்களது பிரதேசங்களில், கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். கடந்தகால வன்முறைகள் தொடர்பாக நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரிய சாட்சியாளர்கள், உள்ளூர்ப் பொறிமுறையில் நம்பிக்கை கிடையாது எனவும், நீதிக்காக வெளிநாட்டு நீதிமன்றம் தேவைப்படுமெனவும் தெரிவித்தனர்.

அதேபோல், அனைத்துப் மக்களையும் உள்ளடக்கும் வகையில், இடைக்கால நீதிப்பொறிமுறை நடவடிக்கைகள் அமைய வேண்டுமெனவும், அதற்காக, பொறிமுறைகளில் பெண்களுக்குரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டதோடு, இவ்விடயத்தை உணர்வுரீதியாகக் கவனமாகக் கையாள வேண்டுமெனவும் கோரப்பட்டது.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை விசாரிக்கப்பட வேண்டுமென்ற கோரிய சாட்சியாளர்கள், அவ்வாறு வெளியேற்றப்படும் போது, கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர், அவ்வமைப்பிலேயே இருந்த நிலையில், அவர்களும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமெனக் கோரினர்.

தொடர்ந்துவந்த அரசாங்கங்கள், பல ஆணைக்குழுக்களை அமைத்த போதிலும், முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக விசாரணையேதும் மேற்கொள்ளப்படாத நிலையில், இதுகுறித்து ஆராய்வதற்காக, தனியான ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்றும் கோரப்பட்டது. இந்தச் செயலணியின் மக்கள் கருத்தறியும் நிகழ்வு, முல்லைத்தீவில் மாந்தை கிழக்கில் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here