ஏ9 வீதி முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் சிற்றூர்தி-உந்துருளி மோதியதில் உந்துருளியில் பயணித்த கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மேற்படி தம்பதியினரின் இரண்டு வயது குழந்தையான லெனாட் ஆசாட் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க ப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் வவுனியா குட்செட் வீதியை சேர்ந்த இளம் தம்பதியரான அல்பிறட் ஜெயக்குமார் லெனாட் (வயது 24) மற்றும் அவரது மனைவி பிரசாந்தினி லெனாட்; (வயது 23) ஆகியோராவர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வவுனியா நோக்கி திரும்பி கொண்டிருந்த குடும்பத்தினர் மீது மாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிற்றூர்தி மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கணவன் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றது.
சிற்றூர்தி சாரதி நித்திரை கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றதாக மாங்குளம் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சிற்றூர்தி சாரதி தப்பியோடிய நிலையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் விபத்தில் உயிரிழந்த, கணவன் மற்றும் மனைவியின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான உந்துருளி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய சிற்றூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலுள்ள பற்றைக் காட்டினுள் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.