உலகின் மிக ஆழமான ஆழ்கடல் புதைகுழி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சீனா ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
சீனா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த ஆழ்கடல் புதைகுழியானது தற்போது பிரச்னைக்குள்ளான பகுதி என்று கருதப்படும் தென் சீனா கடல் பகுதியில் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீல வண்ண புதைகுழி என அறியப்படும் அந்த ஆழ்கடல் புதைகுழியானது 988 அடி ஆழம் கொண்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது பகாமா தீவுகளில் காணப்படும் டீன்ஸ் புதைகுழியை விடவும் மிகவும் ஆழம் என கூறப்படுகிறது. டீன்ஸ் புதைகுழி 202 மீற்றர் ஆழம் மட்டுமே கொண்டதாகும்.
130 மீற்றர் விட்டம் கொண்ட இந்த புதைகுழியானது Paracel தீவுகளில் அமைந்துள்ள பவள பாறைகள் தொகுப்புகளின் அருகாமையில் கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதிதான் சீனா மற்றும் வியட்நாம் அரசுகள் சொந்தம் கொண்டாடும் பகுதி.
குறிப்பிட்ட புதைகுழி பகுதியை மேலும் ஆராய்வது ஆபத்தை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனாலும் சீனாவின் பவள பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள், குறிப்பிட்ட புதைகுழியை ஆழ்கடல் ஆய்வுக்கு பயன்படுத்தும் எந்திரத்தை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
சுமார் 20 க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் அந்த புதை குழியின் மேற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சுமார் 100 மீற்றர்கள் வரை மட்டுமே அப்பகுதியில் ஆக்சிஜன் இருப்பதாகவும், அதற்கு மேல் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் சீனா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.