சிங்கள அரசினால் நன்கு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு யூலை -தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

0
428

makkal-peravai-tk-01-11983 கறுப்பு யூலை, தமிழினப்படுகொலையின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாட்கள், உலகத்தமிழர்களால் அனுட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
ஈழத்தமிழர்களினது உரிமைப்போராட்டத்தை நசுக்கியழிக்கக் காத்திருந்த சிங்கள அரசினால், நன்கு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு யூலை இனப்படுகொலையில், 3000 க்கு மேற்பட்ட தமிழர்கள் அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டனர். வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களின் பலநூறு கோடி பெறுமதிவாய்ந்த சொத்துக்கள் சூறையாடப்பட்டன, எரியூட்டப்பட்டன. உயிரோடு பெண்களும் குழந்தைகளும் எரிக்கப்பட்டனர். அரசுத் தலைவராகவிருந்த ஜே. ஆரின் அமைச்சர்களே தலைமையேற்று தமிழர்கள்மீதான படுகொலைகளையும் சூறையாடல்களையும் மேற்கொண்டனர். தமிழர்கள் அழித்தொழிக்கப்படுவதற்கு சிங்கள அரசே பக்கபலமாக துணை நின்றது. இலங்கையின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்கள், பெரும் துயரத்தொடு அகதிகளாக்கப்பட்டு , அவர்களது தாயகமான வடகிழக்கு நோக்கி வெறும்கையோடு விரட்டியடிக்கப்பட்டனர்.

இலங்கையில் நடைபெறுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் உறுதிபடத் தெரிவித்தார். சிங்கள அரசு உலக நாடுகள் பலவற்றின் கண்டனத்துக்கும் உள்ளானது.

சிங்கள ஆட்சியாளர்களினது இலங்கைத்தீவில் இருந்து தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தின் திரட்சியே, 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இந்நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையுமாகும்!

இனப்படுகொலையூடாக தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை நசுக்கியழித்த சிங்கள இனவாத அரசு, தமிழர்களின் தாயக நிலத்தை ஆக்கிரமித்து தமிழர்களின் வாழ்வையும் வளத்தையும், பண்பாட்டையும் நாசமாக்கித் தமிழர்களின் தனித்துவ அடையாளங்களை அழித்தொழிக்கும் வேலைகளில் தீவிரமாகச் செயற்பட்டுவருகின்றது.

ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினை வழங்காது, சிங்கள பெளத்த மேலாண்மையின் கீழ் தமிழர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தி வைத்திருப்பதையே இணக்க அரசியல் என அரசு கூறிவருகின்றது. சர்வதேச விசாரணைகளிலிருந்து தப்புவதற்காக, நல்லிணக்கம், அபிவிருத்தி என ஆசைவார்தைகாட்டி தமிழர்களின் வாயினை மூடிவிட முயல்கின்றது. இதனை இராசதந்திரம் எனக்கூறி அடிபணிவு அரசியலுக்கு தமிழர்களின் உரிமைப்போராட்டத்தைக் கைவிடவும், தமிழ் அரசியலைத் தலைமையேற்கும் சில தற்குறிகளும் அரசுக்குத் துணைபோகின்றனர்.

அன்பான தமிழ் உறவுகளே! எமது உரிமைப் போராட்டத்துக்கு தீர்வு காணாதவரை, எமக்கு நீதி கிடைக்காதவரை, எமது போராட்டத்தை நாம் கைவிட்டுவிட முடியாது. அநியாயமாக இனப்படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை மறந்துவிடவும் முடியாது.

எமக்கு கிடைக்கக்கூடிய வாய்புக்களைப் பயன்படுத்தி, சிங்கள அரசின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டவேண்டும். சர்வதேச விசாரணையின் அவசியத்தை தொடர்ந்தும் நாம் தீவிரமாக வலியுறுத்த வேண்டும். மீண்டும் ஓர் இனப்படுகொலை எம்மீது நடத்தப்படுவதை தடுத்திடும் வகையில் நிரந்தர சட்டப் பாதுகாப்பைத் தேடிக்கொள்ள வேண்டும்.

சர்வதேச சுயாதீன விசாரணையில் இருந்து சிங்கள இனவழிப்பு அரசு தப்பிக் கொள்ளுமாக இருந்தால்… தொடர்கின்ற… தொடரவிருக்கின்ற தமிழினவழிப்பை யாராலும் தடுத்து நிறுத்தி விடமுடியாது.

ஊடகப் பிரிவு : தமிழீழ மக்கள் பேரவை.♦ பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here