கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
வியாழன் இரவு இடம் பெற்ற இவ்விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த கதிரவேலு கபிராஜ் (வயது 26) என்ற ஒரு பிள்ளையின் தந்தையும் மாவத்தகமவை சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் பீ.சீ.கரம்பொல என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில் உயிரிழந்த காவல்துறையினதும் சடலம், கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த கதிரவேலு கபிராஜ் என்பவரை விபத்து நடைபெற்ற நள்ளிரவு வேளை காணவில்லை என்று தேடியபோது விபத்து இடம்பெற்ற இடத்தில் சங்குபிட்டி கடல் நீரினுள் சடலம் இருப்பதை கண்டு நேற்றுக் காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜ் பார்வையிட்ட பின்னர் கடலில் இருந்து சடலம் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்பது தொடர்பில் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.