இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தொடர்ந்து பரவிப்பாஞ்சான் பகுதியில் நிலைகொண்டுள்ள 57ஆவது படைப்பிரிவு முகாமிற்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதியில் ஏ-9 வீதியை மறித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தமையால் குறித்த பகுதியூடான போக்குவரத்து சில மணிநேரங்கள் தடைப்பட்டன.
இலங்கை அரசு காணி விடுவிப்பது போன்று பாவனை செய்கின்ற போதிலும், இங்கு வேறு முகத்தினையே காட்டி வருகிறது எனவும் மக்களின் காணிகளை இராணுவத்தினர் தொடர்ந்தும் ஆக்கிரமித்து உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட தமது போராட்டமானது கிளிநொச்சி இரணைமடு மற்றும் பரவிப்பாஞ்சான் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இயக்கச்சி மற்றும் காங்கேசன்துறை பகுதிகளிலும் இவ்வாறான போராட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் குறிப்பிட்டனர்.