வடக்கு மாகாணத்தில் பாரம் பரிய சிங்கள கிராமங்கள் என்று எதுவும் இல்லை. இந்த நிலையில் தென்னிலங்கை அரசு என்ன காரணத்திற்காக சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றி அவற்றை பாரம் பரிய சிங்கள கிராமம் என அழைக்க முயல்கின்றது? நல்லிணக்கத்தை பேசிக்கொண்டு அதற்கு குந்தமாக மத்திய அரசு செயற்படக்கூடாது. இதயசுத்தியுடன் செயற்பட முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்;,
மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இலங்கைக்கு என்று மீள்குடியேற்றக் கொள்கை இல்லை. குறித்த பிரதேச மக்களின் விருப்பங்களுக்கு மாறாக அங்கு சட்டவிரோத குடியேற் றங்கள் பல நடப்பதற்கு இதுதான் காரணம்.
எனவே வடக்கு மாகாணத்திற்கு தனியான மீள்குடியேற்றக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என இதன்போது முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் வடக்கு மாகாண மீள்குடியேற்றக் கொள்கை தயா ரிக்கப்பட்டு விட்டது. அது வடக்கு அமைச்சரவையின் ஆலோசனைக்கு இப்போது சமர்பிக்கப்பட்டுள்ளது.
விரைவில் சபையில் சமர்பிக் கப்பட்டு நிறைவேற்றப்படும். இப்படியான சூழலில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் முடிவுக்கு மாறாகவே, மத்திய அரசின் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. எங்களுடைய மீள்குடியேற்றக் கொள்கை தயாரிக்கப்பட்டு முடிவுற்றுள்ள நிலையிலும், இலங்கை அரசின் மீள் குடியேற்றக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ள சந்தர்பத்திலும், மத்திய அரசின் அமைச்சரவை ஏன் இந்தத் தீர்மானத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது.
ஏதோ உள்நோக்கத்துடன் செயற்படுகின்றார்கள் என்று சந்தேகத்தை உருவாக்குகின்றது. மத்திய அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தில் பாரம்பரிய சிங்களக் கிராமங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.
பாரம்பரியம் என்றால் அதன் வரை விலக்கணம் என்ன? வடக்கில் எங்கே பாரம்பரிய சிங்களக் கிராமங்கள் இருந்தன? ஆராய்ந்து பார்த்தால் அப்படி எதுவும் இல்லை.
தமிழ் – முஸ்லிம் மக்கள் அவர்களது பாரம்பரியக் கிராமங்களில் குடியமர்த்தப்பட வில்லை. தமிழ் மக்களின் பூர்விக – பாரம்பரிய கிராமமாக வவுனியாவில் இருந்த கொக்கச்சான் குளம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போகஸ்பெவவாக மாறிவிட்டது. கொக்கச்சான் குளத்தில் தமிழர்கள் 1980 ஆம் ஆண்டு வரையில் வாழ்ந்தார்கள். அதன் பின்னர் அவர்கள் அடித்து விரட்டப்பட்டார்கள். 1983 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள்.
எனவே வடக்கு மாகாண சபைக்கு சம அந்தஸ்தை – சமபங்களிப்பை, மத்திய அரசின் மீள்குடியேற்றச் செயலணியில் வழங்க வேண்டும். வடக்கு மாகாண சபையின் மீள் குடியேற்றக் கொள்கையை நடை முறைப்படுத்த வேண்டும். வடக்கில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் தொடர்பிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் மேற்குறித்த செயற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என வடக்கு சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.