ஜம்மு காஷ்மீர் மக்கள் மீதான ராணுவத்தின் வன்முறையைக் கண்டித்து சென்னையில் நேற்று பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
காசுமீர் மக்கள் மீதான இந்திய அரசின் வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 19-07-2016 செவ்வாய் மாலை சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழர் விடியல் கட்சி சார்பில் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தமிழ்த்தேசிய மற்றும் பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
காசுமீர் மக்களின் மீதான இந்திய அரசின் அரச பயங்கரவாதத்தையும், இனப்படுகொலைகளையும் நிறுத்தக் கோரியும், காசுமீரிலிருக்கும் 7,00,000 இந்திய ஆயுதப் படையினரை உடனே வெளியேற்றக் கோரியும், சிறப்பு ஆயுதப் படை சட்டத்தை(AFSPA) நீக்கக் கோரியும், காசுமீர் மக்களுக்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்திய அரசு ஐ.நாவில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஈழத் தமிழர் சிந்திய ரத்தம் மட்டுமல்ல காசுமீர் மக்கள் சிந்தும் ரத்தமும் எங்கள் ரத்தம் என்று முழக்கங்களை எழுப்பினர்.
இவ்வாறு மே 17 இயக்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.