யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் – சிங்கள மாணவர்களிடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலை அடுத்து வவுனியா வளாகம் உட்பட பல்கலையின் அனைத்து பீடங்களையும் காலவரையின்றி மூடுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தில் எந்த கற்பித்தல் கற்றல் நிகழ்வுகளும் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் விஞ் ஞானபீட இரண்டாம் வருட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது வழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் மூலம் மாணவர்களை தாமும் வரவேற்க வேண் டும் எனவும் முரண்பட்டனர். எனினும் தமிழ் மரபுப்படி மாணவர்கள் அழைத்து வரப்பட்ட வேளை,திடீரென எந்த அறிவிப்பும் இன்றி சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை அங்கு கொண்டுவந்து ஆடினார்கள்.
இதனால் கொதிப்படைந்த தமிழ் மாணவர்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றியும், நிகழ்ச்சி ஒருங்கமைப்புக்கு மாறாக எவ்வாறு கண்டி நடனம் கொண்டுவரப்பட்டது என சிங்கள மாணவர்களிடம் கேட்டனர். இதன்போது வாக்குவாதம் முறுகல் நிலைக்கு செல்ல இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவங்களை அடுத்து இருதரப்பு மாணவர்களும் கற்களாலும், கொட்டன்களாலும் தாக்குதலில் ஈடுபட, பல்கலைக்கழகமே கலவர பூமியாக காணப்பட்டது. இதன் காரணமாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து உட னடியாகவே (நேற்று முன்தினமிரவு) மோதல் சம்பவம் இடம்பெற்ற பீடமான விஞ்ஞான பீடத்தையும், மாணவர் விடுதிகளையும் மூடுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்தது.
இதன்படி மாணவர்களை உடனடியாகவே விடுதிகளை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டு, அவர்கள் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கும் செல்வதற்கு பல்கலை நிர்வாகத்தால் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. இதன்படி விஞ்ஞான பீடத்தை சேர்ந்த தென்பகுதி மாணவர்கள் பலர் நேற்று முன்தினம் பின்னிரவுக் கிடையில் வெளியேறியிருந்தனர்.
இந்த நிலையில் பல்கலையில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினம் கூடிய யாழ்.பல்கலைக்கழக பேரவை, குறித்த மோதல் சம்பவத்தில் மாணவர்கள் பாதிப்படையாத வகையில் அவர்களது இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியதுடன்,
விரிவுரையாளர்களும் மாணவர்களும் அனைத்து பீடங்களின் கல்விசார் நடவடிக்கைகளை தொடர்வதற்கு, ஏற்ற பாதுகாப்பான சூழலை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்கும் என்பதை மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் அறியத்தருகின்றோம் என யாழ்.பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மூலமாக அறி வித்தது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற மோதல் ஏனைய பீடங்களிலும் தொடர்ந்து விடக்கூடாது என்ற நோக்கிற்காகவே அனைத்து பீடங்களையும் மூடும் முடிவை நிர்வாகம் எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.இதேவேளை பல்கலையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, பல்கலைக்கழகத்தை சூழ பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.