கண்டி நடனத்தால் யாழ்.பல்கலையில் மாணவர்கள் மோதல்!

0
234

10915யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் நேற்று இடம்பெற்ற புதுமுக மாணவர்களின் வரவேற்பு வைபவத்தில் கண்டி நடனத்தை சிங்கள மாணவர்கள் சிலர் பலவந்தமாக திணிக்க முற்பட்டதால், தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களிடையே கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் மாணவர்கள் பலர் காயமடைந்ததுடன் பல்கலைக்கழக உடைமைகள் பலவும் சேதமாக்கப்பட்டன. மாணவர்களின் மோதல் உச்சமடைந்ததையடுத்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

மோதலுக்கான காரணம்
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்றைய தினம் விஞ்ஞானபீட இரண்டாம் வருட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்விற்கான ஒழுங்குகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே நடைபெற்று வந்த நிலையில், குறித்த வரவேற்பு நிகழ்வில் மாணவர்களை வரவேற்று கொண்டு செல்லும் போது கண்டிய நடனமும் இடம்பெற வேண்டும் என சிங்கள மாணவர்களால் கோரப்பட்டது.

இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் மறுப்பு தெரிவித்திருந்தனர். தமிழ்ப்பாரம்பரிய முறையிலேயே கடந்த பல தசாப்த காலமாக இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன என வும், ஆகையால் தமிழ் மரபுப்படியே மாணவர்கள் மங்கல வாத்தியங்களுடன் வரவேற்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. கண்டிய வரவேற்பு நடனத்திற்கு பதிலாக நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்குள் சிங்கள மாணவர்களின் நிகழ்வுகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் கூறப்பட்டது.

இதனை ஏற்றுக்கொள்ளாத சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் மூலம் மாணவர்களை தாமும் வரவேற்க வேண்டும் எனவும் முரண்பட்டனர். இதன் காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் முடிவே இறுதி முடிவு என அறிவிக்கப்பட்டு, நேற்றைய தினம் நண்பகல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் போது தமிழ் மரபு முறைப்படி புதுமுக மாணவர்கள் அழைத்து வரப்பட்டவேளை,

திடீரென எந்த அறிவிப்பும் இன்றி சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை வெளி கலைஞர்களின் துணையுடன் அங்கு கொண்டு வந்து ஆடினார்கள். இதனால் கொதிப்படைந்த தமிழ் மாணவர்கள் முன்னறிவிப்பு ஏது மின்றியும், நிகழ்ச்சி ஒருங்கமைப்புக்கு மாறாக எவ்வாறு கண்டி நடனம் கொண்டுவரப்ப ட்டது என சிங்கள மாணவர்களிடம் கேட்டனர். இதன்போது வாக்குவாதம் முற்றி முறுகல் நிலைக்கு செல்ல இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

பேராசிரியர் மீதும் தாக்குதல்
இதனால் வரவேற்பு நிகழ்வு இடைநடுவிலேயே குழம்பிப் போனதுடன் மாணவர்களிடையே மோதல்நிலை அதிகரித்து செல்ல சம்பவ இடத்திற்கு நிலைமையை கட்டப்படுத்த வந்த விஞ்ஞான பீடாதிபதியையும், பல்கலைக்கழக மாணவ ஒன்றியத் தலைவரான சிசிதரனையும் அங்கு மோதலில் ஈடுபட்டிருந்த சிங்கள மாணவர்கள் தள்ளுமுள்ளையின் போது தாக்கியுள்ளனர். இதனால் தமிழ் மாணவர்கள் கோபமடைந்து சிங்கள மாணவர்கள் மீது தாக்குதலை தொடர ஆரம்பித்தனர்.

இந்த தாக்குதலால் நிலைமை கட்டுக்கடங்காமல் ஆபத்தான கட்டத்தை செல்ல, அங்கு நின்ற பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு தப்பி சென்றனர். பதிலுக்கு சிங்கள மாணவர்களும் கொட்டன்களை தூக்கி தமிழ் மாணவர்கள் மீது மோசமான தாக்குதலை மேற்கொண்டனர். இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து சிதறி ஓடினர்.

பிரிந்து நின்று தாக்குதல்
தமிழ் மாணவர்கள் ஒரு குழுவாகவும் சிங்கள மாணவர்கள் ஒரு குழுவாகவும் பிரிந்து மோத ஆரம்பித்தனர். இதன்போது தான் மோதல் உச்சமடைந்து இருந்தது. தமிழ் மாணவர்கள் பரமேஸ்வரன் ஆலய பக்கமும், சிங்கள மாணவர்கள் விஞ்ஞானபீடத்தின் பக்கமும் நின்று இடையிடையே மோதிக்கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் மாணவர் களை சிங்கள மாணவர்கள் கலைத்து சென்று தாக்குதல் நடத்துவதும், சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை கலைத்து சென்று தாக்குதல் நடத்துவதுமாக மாறிமாறி தாக்குதல் நடைபெற்றது.

பல்கலை வளாகங்களில் நின்ற மரங்களில் தடிகளை முறித்தும், அங்கு காணப்பட்ட இரும்பு குழாய்கள், பொல்லுகள் என்பவற்றோடு மாணவர்கள் அனைவரும் ரவுடிகளாக காட்சியளித்தனர். இந்த கைகலப்புத் தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே இரு மாணவர் குழுக்களிடையேயும் கல்லெறி தாக்குதலும் ஆரம்பமானது. இக் காட்டுமிராண்டிதனமான கல்லெறி தாக்குதலால்,

அங்கு நின்ற மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி சிதறி ஓடினார்கள். இதனால் பல்கலை வளாகத்திற்குள் பெரிய கலவரமே நடை பெறுவது போன்று காணப்பட்டது. இந்த கல் லெறி தாக்குதலிலேயே அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

பொலிஸார் வருகை
சம்பவம் நடைபெற்று அரை மணித்தியாலங்களின் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸாரால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போக, உதவிக்கு யாழ்.பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இதன்போது யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போதிலும் பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையவில்லை. விஞ்ஞானபீடத்தின் நுழைவாயிலுக்கு முன் னால் காத்து நின்றனர். எனினும் பொலிஸ் தரப்பை சேர்ந்த புலனாய்வு பிரிவினர் ஏற்கெனவே பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்திருந்ததனை அவதானிக்க முடிந்தது.

புலனாய்வு பிரிவின் மிரட்டல்
இதன்போது பொலிஸ் தரப்பை நோக்கி வெளியே வந்த சிங்கள மாணவர்களில் சிலர் உடனடியாக பொலிஸாரை உள்ளே வருமாறும்,கைது செய்யுமாறும் வற்புறுத்தினர், எனினும் உடனடியாக உள்ளே வருவதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்த போதிலும், சிங்கள மாணவர்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலால் சீருடை அணிந்த பொலிஸார் உள்ளே நுழைந்தனர்.

இதன்போது நுழைவாயிலில் இருந்த மாணவர்களை உள்ளே செல்லுமாறு கூறியதுடன் கலைத்து சென்று ஓரிடத்தில் விட்டனர். இதன்படி சிங்கள மாணவர்கள் விஞ்ஞானபீட முன்வாயிலுக்கு அருகில் ஒன்று சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட இரு தரப்பும் மேலும் மோதலில் ஈடுபடாதவாறு பிரித்து விடப்பட்டனர். இதன்பின்னர் நிலைமை ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தது.

வெளியே வரத்தான் வேணும்(கொச்சைத் தமிழ்)
அவ்வேளையில் சீருடை அணிந்த பொலிஸாருடன் உள்ளே நுழைந்த சிலர் (பொலிஸார் என உறுதிப்படுத்த முடியவில்லை) தமிழ் மாணவர்களை நோக்கி சும்மா கத்தாதீங்க, பொய்யா கத்த வேணா.., நீங்கள் எல்லாம் வெளியே வரத்தான் வேணும், பார்த்து நடங்க என்று மிரட்டினார்கள். இவ்வாறு மிரட்டியவர்கள் தகாத வார்த்தைகளாலும் தமிழ் மாணவர்களை பேச தமிழ் மாணவர்கள் பொலிஸ் தரப்போடும் முரண்பட ஆரம்பிக்க, தகாத வார்த்தை பேசிய குறித்த நபர் அங்கிருந்து மெதுவாக நழுவி, சிங்கள மாணவர்கள் நின்ற பக்கம் சென்றார்.

அங்கு சென்று சிங்கள மாணவர்களை அவர் ஆசுவாசப்படுத்தினார். இதன் பின்னர் விஞ்ஞானபீட கட்டடத்தொகுதியை அந்த பக்கமிருந்த சிங்கள மாணவர்களே கொட்டன்களால் அடித்து உடைத்தனர். இதனை படம் பிடிக்க சென்ற ஊடகவியலாளர்களையும் அவர்கள் அச்சுறுத்தினார்கள். பின்னர் சீருடை அணிந்த பொலிஸார் தலையிட்டதனால் நிலைமை பூரணமாக கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

வெளியேறிய மாணவர்கள்
மோதல் முடிவுக்கு வந்ததும், சிங்கள மாணவர்கள் சிதறிக்கிடந்த தமது துவிச்சக்கர வண்டிகளையும், பொருட்களையும் தூக்கி கொண்டு வெளியேற ஆரம்பித்தனர். இவ்வாறு வெளியேற ஆரம்பித்த மாணவ ர்களுக்கு வீதியில் நின்ற பொலிஸாரும் பாதுகாப்பு வழங்கி இராமநாதன் வீதி வழியாக பிறவுண் வீதி நோக்கி அழைத்து சென்றனர்.

காயமடைந்த சிங்கள மாணவர்களில் சிலரை பொலிஸார் தமது வாகனங்களில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்து சென்று வைத்தியசாலையில் அனுமதித்தனர். காயமடைந்த தமிழ் மாணவர்கள் வெளியே வந்தால் பொலிஸார் தம்மை கைது செய்துவிடுவார்களோ என்ற அச்சம் காரணமாக சிகிச்சைக்கு செல்லாமல் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே இரத்தம் சிந்தியபடி நின்றனர்.

ஊடகவியலாளர்களை மிரட்டிய சிங்கள மாணவர்கள்
சிங்கள மாணவர்கள் இவ்வாறு வெளியே செல்லும் போது பொலிஸாரும் அதிகளவில் குவிந்திருந்திருந்தனர். வீதி வழியாக அனைத்து மாணவர்களும் சென்று கொண்டிருக்கும் போது, இராமநாதன் வீதியில் உள்ள புகையிரத கடவையில் அனைத்து சிங்கள மாணவர்களும் கூடியிருந்தனர். இதன்போது சிலர் முரண்பட்டுக்கொண்டும் இருந்தார்கள்.

அதனை படம் பிடித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை நோக்கி வந்த சிங்கள மாணவர்கள் பொலிஸாருக்கு முன்னாலேயே மிரட்டினர். இதன்போது தொலைக் காட்சி ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தனர். எனினும் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊட கவியலாளரை அங்கிருந்து அழைத்து சென்றார். இதற்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவரை கொட்டனை காட்டியும் சிங்கள மாணவர்கள் அச்சுறுத்தியிருந்தனர்.

நிலைமை சுமுகம்
இவ்வாறு அனைத்து மாணவர்களும் வெளியேறிய பின்னர், பல்கலைக்கழகமும் அதனை அண்டிய சூழலும் அமைதியடை ந்தது. பிற்பகல் நான்கு மணிக்கு பின்னர் பொலிஸார் மட்டுமே பல்கலைக்கழக வளா கத்தை சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர். வெளியாட்கள் எவரையும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவலாளிகள் அனுமதிக்க வில்லை.

மாணவர்களால் பல்கலைக்கழக கட்டட ங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து உடனடியாக எந்தவித சேத விபரங்களும் வெளியாகவில்லை. எனினும் கட்டட கண்ணாடிகள், ஓடுகள், கதவுகள், ஜன்னல்கள் என உடைமைகள் பல உடைத்து நொறுக்கப்பட்டிருந்தன. மோதல் ஓய்ந்த பின்னர் கூடிய பல்கலைக்கழக உயர்மட்டம் விஞ்ஞான பீடத்தை காலவரையின்றி மூடுவதாக அறிவித்துள்ளது.

விசாரணைகள் தொடரும்
மேற்படி மோதல் சம்பவம் தொடர்பில் நேற்று இரவு வரை எந்த மாணவர்களும் கைதாகவில்லை. எனினும் மோதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடரும் என பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.
மேலும் பல்கலைக்கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, சொத்துக்களுக்கு சேதத்தை விளைவித்த மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் கடுமையாக காயமடைந்த பதின் நான்கு மாணவர்கள் தனியார் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் அதிகமா னோர் சிங்கள மாணவர்களாக உள்ள போதிலும், தாம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு செல்லவில்லை என காயமடைந்த தமிழ் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
(Valampuri)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here