நாள்: 16.07.2016
பிரெஞ்சு மக்களின் துயரத்தில் நாமும் இணைந்துகொள்வதனால்
மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு நிகழ்வு இடைநிறுத்தம்!
பிரான்சில் கடந்த 14.07.2016 வியாழக்கிழமை இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, நீஸ் நகரத்தில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையில், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் அதேநேரம், வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்துடன் நாமும் இணைந்துகொள்கின்றோம்.
நாம் இவ்வாறான வன்கொடுமைகளை நித்தம் கண்டு அனுபவித்த ஓர் இனம். குறித்த வன்முறையானது எமது மக்களின் படுகொலைகளை எம் கண்முன் நிறுத்துகின்றது. குறித்த வன்முறையை அடுத்து பிரான்சில் மூன்று தினங்கள் துக்க நாட்களாக பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக எம்மால் நடாத்தப்படும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வை இடைநிறுத்தி, மக்களின் துயரில் நாமும் பங்குகொள்வதற்கு முடிவுசெய்துள்ளோம்.
எனவே 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டியின் இறுதிப்போட்டி நிகழ்வுகள் யாவும் மறு அறிவித்தல்வரை நடைபெறாது என்பதனைத் தெரிவிக்கும் அதேவேளை, குறித்த போட்டிகள் இடம்பெறும் நாள் பின்னர் அறியத்தரப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதனால், ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கும் வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு