துருக்கியில் ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்த நிலையில் ராணுவத்துக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இதில் 17 போலீசார் உட்பட 42 பேர் பலியாகி உள்ளனர்.
துருக்கி நாட்டில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அகற்றிவிட்டு அரசை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் நேற்று இரவு அறிவித்தது. துருக்கி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைத்து விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. அங்காரா நகரில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இராணுவத்தினர் குவிந்தனர்.
இதனையடுத்து, அங்காரா நகரில் ராணுவத்துக்கும் அரசு தரப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
துருக்கி நாடாளுமன்றம் மீது இராணுவத்தினர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தினர். இஸ்தான்புல் நகரில் உள்ள தஸ்கின் சதுக்கம் அருகே போலீசார் மற்றும் இராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
அங்காராவில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றின் மீது இராணுவத்தினர் ஹெலிகாப்டரில் நடத்திய தாக்குதலில் 17 போலீசார் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது.