பழைய முறிகண்டியில் தொடரும் மணல் அகழ்வு!

0
780

imageமுல்லைத்தீவு, துணுக்காய் பழையமுறிகண்டிக் கிராமத்தில் மீள்குடியேற்றத்திலிருந்து தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுவதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

47 குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ள கிராமத்தில் 2009ஆம் ஆண்டிலிருந்து கிராமத்தின் ஆற்றுப்படுக்கைகளிலிருந்து மணல் அகழப்பட்டு வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதனால் தமது கிராமத்தின் சூழல் பாதிக்கப்பட்டு வருவதாக இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பழையமுறிகண்டிக் குளத்தின் கீழ் பெரும் எடுப்பில் நடைபெறும் மணல் அகழ்வினால் எதிர்காலத்தில் குளத்தின் அணைக்கட்டிற்குப் பாதிப்பு ஏற்பட்டு குளம் உடைப்பெடுக்கக் கூடிய அபாய நிலைமை காணப்படுவதாகவும் பழையமுறிகண்டிக் கிராமத்தில் நடைபெறும் மணல் அகழ்வு தொடர்பாக வடமாகாண முதலமைச்சர், வடமாகாண விவசாய அமைச்சர், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், துணுக்காய் பிரதேச செயலர் ஆகியோருக்கு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளபோதிலும் கிராமத்தில் நடைபெறும் மணல் அகழ்வு இதுவரை தடுத்து நிறுத்தப்படவில்லையென கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் பழையமுறிகண்டிக் கிராமத்தில் நடைபெறும் மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துவதற்கு கிராமத்துக்கு நேரடியாக வருகைதந்து கிராம மக்களுடன் கலந்துரையாடி மணல் அகழ்வினைத் தடுத்து நிறுத்துமாறும் அதேபோன்று மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் கிராமத்துக்கு வருகைதருமாறும் பழையமுறிகண்டிக் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here