பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து டேவிட் கேமரூன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து தெரசா மே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து ராணி 2-ம் எலிசெபத் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து அண்மையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க ஆதரவு கோரி பிரதமராக இருந்த கேமரூன் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் வாக்கெடுப்பின்போது 52% மக்கள், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, தன்னுடைய கருத்து மாறாக மக்கள் வாக்களித்ததால் தாம் பதவி விலகப்போவதாக கேமரூன் அறிவித்திருந்தார்.
இதனால் பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த தெரசா மே மற்றும் ஆண்டிரியா லீட்சன் ஆகிய இருவரும் புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தனர். ஆனால் போட்டியிலிருந்து விலகுவதாக ஆண்டிரியா அறிவித்தார். இதனால் தெரசா மே போட்டியின்றி பிரதமராக தேர்வாவது உறுதியானது.
இந்நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமராக தெரசா மே-வை நியமித்து ராணி 2-ம் எலிசபெத் அறிவிக்கை வெளியிட்டார். இதையடுத்து டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட தெரசா மே, புதிய அரசின் நிதியமைச்சராக பிலிப் ஹாமண்டையும், வெளியுறவுத்துறை அமைச்சராக போரிஸ் ஜான்சனையும் பரிந்துரை செய்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வலியுறுத்தி பிரச்சாரம் செய்தவர்தான் போரீஸ் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து, டேவிட் கேமரூன் நேற்று முறைப்படி விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை பக்கிங்காம் அரண்மனையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்திடம் டேவிட் கேமரூன் நேரில் வழங்கினார்.