யாழ்ப்பாணத்தில் தற்போது பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட உளவள சமூக அதிகாரி கௌதமன், யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கருகிலுள்ள வியாபார நிலையங்களில் 21 வயதிற்குக் குறைந்தவர்களுக்கும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் சமூக சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது ஏற்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக அதிகளவாக கடிதம் மூலமாக அறியப்படுத்துகிறார்கள். இவற்றில் எம்மால் முடிந்தவற்றை நாம் மேற்கொண்டு அப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்றோம். எனினும் சில பிரச்சினைகளுக்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டிய விடயங்கள் தொடர்பாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியும் அவர்கள் அதனை செய்யாவிட்டால் மக்களுக்கு எம் மீதும் அரசாங்கத்தின்மீதும் அவ நம்பிக்கை ஏற்படும்.
குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள சில பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகிலுள்ள வியாபார நிலையங்களில் 21 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு போதைப்பொருளான புகைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தொடர்பான சகல ஆவணங்களும் எம்மிடமுள்ளன. இவற்றை யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வழங்கவுள்ளோம்.
மேலும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில் இவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் நிலையம் ஒன்று யாழ்.பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளபோதும் அவர்கள் தமது விசாரணைகளை, சட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்குத் தேவையான ஆளணி மற்றும் வாகன வசதிகள் போதாது என கூறி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
இதன்போது குறித்த விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதிலளித்ததாவது,
தற்போது ஆயிரத்து 500 பேர் பொலிஸ் பயிற்சியினை பெற்று வருகின்றனர். அவர்கள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் பணிக்கு அமர்த்தப்படும்போது சிறுவர். பெண்கள் பாதுகாப்பு பொலிஸ் நிலையத்துக்கும் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அத்துடன் குறித்த பெண்கள். சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் நிலையத்துக்கு முச்சக்கரவண்டியொன்றைப் பெற்றுத் தரு-வதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவ் வாகனம் கிடைக்கப்பெற்றால். வாகனத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யமுடியும் என அவர் தெரிவித்திருந்தார்.
Home
ஈழச்செய்திகள் யாழ்.மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கருகில் போதைப்பொருள் விற்பனை :உளவள சமூக அதிகாரி!