தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு கச்சதீவை மீட்டுக்கொள்வதே ஒரே வழி என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு
பாக்கு நீரிணைப் பகுதியில் கடற்கரையோரம் வாழும் லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு நிரந்தர, அமைதியான தீர்வை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்த கருத்தை மீண்டும் ஆணித்தரமாக எழுதுகிறேன்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, கடத்தப்படுவது, சிறை பிடிக்கப்படுவது குறையாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அண்மையில் இராமநாதபுர மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி தளத்திலிருந்து 3 இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 16 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கடந்த 7 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன்மூலம் இலங்கை அரசின் பிடியிலிருக்கும் தமிழக மீனவர்களின் மொத்த எண்ணிக்கை 73 ஐ எட்டியுள்ளது.
கச்சதீவு மீட்பு
இந்திய எல்லையான கச்சதீவை இலங்கைக்கு கொடுக்க வகை செய்த, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இந்தியா –- இலங்கைக்கு இடையே ஏற்பட்ட, அரசியல் சாசனத்துக்கு முரணான ஒப்பந்தங்களை எதிர்த்து சுப்ரீம் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துள்ளது.
வழக்கு நீதிமன்றில் உள்ளதால், இலங்கைக்கான கடல் எல்லையை ஒரு முடிந்துபோன பிரச்சினையாக கருதக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. பாக்கு நீரிணைப் பகுதியில் உரிமையுடன் அமைதியான முறையில் மீன்பிடிப்பை தமிழக மீனவர்கள் மேற்கொள்வதற்கு, கச்சதீவை மீட்பது ஒன்றுதான் நிரந்தர தீர்வாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Home
சிறப்பு செய்திகள் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண ‘கச்சதீவை மீட்பதுஒன்றே வழி’ – ஜெயலலிதா!