ஊர்க் கோழிகள் குறித்த அளவு முட்டைகளை இட்டபின்னர் அடைகாக்கும். கோழிகள் அடைகாத்தல் என்பது தன் இனத்தை பெருக்குவதற்கானது. இருந்தும் கோழிவளர்த்தவர்கள் முட்டைகளை எடுத்துவிடுவதால் அடைகாத்தல் என்பது அடைகிடத்தல் என்பதாக மாறிவிடுகிறது.
ஆக, முட்டையில்லாமல் அடைகாத்தலை அடைகிடத்தல் என்று நாம் சொல்லிக் கொள்வோம்.
முட்டைகளை இட்டபின் ஓர் ஓய்வாகவும் அடைகிடத்தல் அமைந்து விடுகின்றது.
இருந்தும் கோழிகள் அடைகிடப்பது அதன் உரிமையாளனுக்கு உடன்பாடான விடயமல்ல.
அதனால் கோழியின் அடையை மாற்றுவதற்கு சில நுட்பங்களை கையாள்வார்கள். அதில் ஒரு முறை கோழிச் செட்டை ஒன்றை எடுத்து அதன் மூக்கில் குத்திவிடுதல்.
இந்த முறையில் அடைமாறுவதற்கு சில நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பதால் இதற்கு மாறாக இன்னொரு முறையும் உண்டு.
இதில் அடைகிடக்கும் கோழியின் வாலில் ஒரு காவோலைச் சிறகை கட்டிவிடுதல்.
கோழியின் வாலில் காவோலைத் துண்டை கட்டி விட்டதும் கோழி மெல்ல நடக்கும். அப்போது காவோலை சத்தம் கேட்கும். சத்தத்தால் பயந்த கோழி ஓடத்தொடங்கும். ஓடத் தொடங்கும் போதே காவோலைத் துண்டின் சத்தம் வேகமெடுக்க கோழியும் தன்னால் முடிந்தளவு ஓடி ஓடி களைப்படைந்து அடைகிடத்தலை கைவிட்டு விடும்.
ஆக, கோழியின் வாலில் காவோலைத் துண்டைக் கட்டி கோழியை பயப்படுத்தி ஓய்வெடுக்க சந்தர்ப்பம் கொடுக்காமல் அடையை மாற்றி முட்டையைப் பெற்றுக் கொள்வதிலேயே கோழியின் உரிமையாளன் கண்ணும் கருத்துமாக இருப்பான்.
அடைக்கோழியின் வாலில் காவோலை கட்டுதல் போன்றவேலைகள் நம் அரசியலிலும் நடக்கிறது.
அதாவது ஆட்சிப்பீடத்தில் இருக்கின்றவர்கள் பல சந்தர்ப்பங்களில் நம் அரசியல்வாதிகளுக்கு காவோலை கட்டுகின்றனர்.
இந்தக் காவோலையைக் கண்டு பயம் கொள்ளும் அரசியல்வாதிகள் உறுதிபட கதைப்பதைத் தவிர்த்து பயத்தால் எதற்கும் சம்மதம் என்று சொல்லும் அளவில் இருக்கின்றனர்.
இந்தப் பயம் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய பலவற்றை இல்லாமல் செய்துவிட்டது.
இன்றிருக்கக் கூடிய சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கான ஒரே பலமாக இருக்க வேண்டியது நம் அரசியல் தலைமையின் துணிச்சலே. இருந்தும் காவோலை கட்டப்பட்ட அடைக் கோழிகள் போல நம் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கின்றனர்.
ஒரு சில தலைவர்கள் துணிவோடு சொல்ல வேண்டியதை மிகத் தெளிவாக சொல்லுகின்ற போதிலும் அவர்களை ஓரங்கட்டுவதிலேயே பயந்த -பயந்தது போல நடிக்கும் அரசியல்வாதிகள் முனைப்புக் காட்டுகின்றனர். இந் நிலைமை மிக மோசமானது. இதற்கு முடிவு கட்டாமல் விட்டால் எமக்குக் கிடைத்த துணிச்சல் மிகு அரசியல் தலைவர்களையும் நாம் இழக்க வேண்டிவரும் என்பதால், காவோலை கட்டி எங்களை பயப்படுத்த எவரையும் நாம் அனுமதிக்கக் கூடாது என்பதே நம் தாழ்மையான கருத்து.
இனப் போரில் பலவற்றை இழந்துபோன ஓர் இனத்தின் மீள் எழுச்சிக்கு துணிவும் நிதானமும் ஒற்றுமையும் நேர்மையும் இனப் பற்றுமே முதன்மையானவையாக இருக்கும்.
(Valampuri-editorial)