கனடா நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த போதிலும் , தேசிய ஊடகப் பணியில் தம்மை ஒரு தொண்டராக இணைத்துக்கொண்டவரே!
அறிவுச்சோலையில் பணியாற்றியதனூடாக தமிழ் மொழியிலும் தாய் நாட்டிலும் பற்று வைத்து தேசப்பணியாற்றியவரே!
பல்வேறு இடர்களைச் சந்தித்த வேளையிலும் கொண்ட கொள்கையிலிருந்து சற்றும் விலகாமல் விடுதலைப் பணியை சிறப்பாகச் செய்தவரே!
தனக்கென ஏதும் எண்ணாது தமிழரின் நலத்தை மட்டுமே எண்ணி மிகவும் எளிமையாக வாழ்ந்த மனிதரே!
2005ம் ஆண்டிலிருந்து இறுதிவரை கியூபெக் மாநிலத்தின் தேசியச் செயற்பாட்டுத் தலைமையாளராக மனச்சுத்தியுடன் பணியாற்றி வந்தவரே!
தமிழீழக் கனவுடன் வாழ்ந்த தேசப்பற்றாளரே! தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரே!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு மனங்கலங்கி நிற்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் தங்கள் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு துயரிலும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’
தமிழீழ விடுதலைப் புலிகள்
டென்மார்க் கிளை.
துரைரத்தினம் முரளிகரன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு – தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
10.01.2015
துரைரத்தினம் முரளிகரன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.
தமிழ்மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு மனிதரை தமிழினம் 05.01.2015 அன்று இழந்துவிட்டது. தமிழின விடுதலைக்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அயராது உழைத்த தூய ஜீவன் இன்று துயில் கொள்ளுகிறது.
அமரர் துரைரத்தினம் முரளிகரன் (முரளி) அவர்கள் தனது தேசத்தின் மீது அளவில்லா பற்றுக்கொண்டவராகத் திகழ்ந்தார். தான் வரித்துக் கொண்ட இலட்சியத்திற்காக தனது வாழ்நாள் முழுவதையும் தாயகத்திலும் பின்னர் புலம்பெயர் தேசத்திலும் அர்ப்பணித்தார்.
சுயநலமான வாழ்க்கை என்னும் குறுகிய வட்டத்திற்குள் தனது வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வினை வாழ்ந்தவர். தனது இனப்பற்றாலும், தேசப்பற்றாலும் தமிழீழ விடுதலைக்காகவும் தமிழ்க் குமூகமேன்மைக்காகவும் இறுதிவரை பணியாற்றினார்.
தனது மக்கள் விடுதலையடைய வேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், செயலாற்றல் அனைத்தையுமே ஒருங்கிணைத்து தேசப்பணிபுரிந்தார்.
கொடிய நோயினால் இவரது உடல் தளர்ந்து போயிருந்தாலும் உள்ளத்தில் விடுதலை உணர்வையும், தமிழ்மண்ணிலும், தமிழ்மக்களிலும் இறுதிவரை பற்றுமிக்கவராகவே வாழ்ந்தவர். தேசியத் தலைவர் மீதும் எமதினத்தின் விடுதலைப் போராட்டத்தின் மீதும் பற்றோடும் உறுதியோடும் இறுதி மூச்சு வரை செயற்பட்டு வந்த அமரர் துரைரத்தினம் முரளிகரன் (முரளி) அவர்களுக்கு எமது விடுதலை அமைப்பு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிக்கிறது.
அத்தோடு நாட்டுப்பற்றாளர் துரைரத்தினம் முரளிகரன் அவர்களின் பிரிவால் துயரில் துடிக்கும் அவரது குடுமபத்தினருடன், அனைத்து தமிழ் உறவுகளும் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’