வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேறக்கோரியும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும், மக்களுடைய மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் யாழ். நகரில் நேற்றையதினம் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த கையெழுத்து வேட்டை நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் பிரதான பேருந்து நிலையத்தின் அருகே நடைபெற்றது.
இதன் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமது கையெழுத்துக்களை பதிவுசெய்தனர். அவ்வியக் கத்தின் அங்கத்தவர்கள் வீதியால் சென்ற மக்களுக்கு விழிப்பூட்டல் துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினர்.
தொடர்ந்து நாட்டில் இடம்பெற்று வருகின்ற அண்மைக்கால செயற்பாடுகள், சகல அரசியல் கைதி களையும் உடன் விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்ட சகலரதும் தகவல்களையும் உடன் வெளி யிடுதல். இராணுவத்தை முகாம்களுக்குள் மட்டுப்படுத்தல் உள்ளிட்ட செயல்களை உடனடியாக முன்னெ டுக்க வலியுறுத்தி கையெழுத்து செயற்பாட்டை அவர்கள் முன்னெடுத்தனர்.
இதன் போது கருத்துரைத்த போராட்ட ஏற்பாட்டாளர்கள்,
இராணுவம் என்பது தேசிய பாதுகாப்புக்குரியது. இலங்கையில் தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற சூழல் இல்லாத நிலையில் இவ்வளவு இராணுவம் வடக்கில் நிலைகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்தோடு சாதாரண சிவில் நடவடிக்கையில் இராணுவத்தினர் பங்குகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எங்களை பொறுத்தவரை சிவில் பாதுகாப்பு திணைக்களமும் இராணுவம்தான். வடக்கு மாகாண சபை நிர்வகிக்க வேண்டிய முன்பள்ளிகளை அவர்கள் நிர்வகிக்கின்றார்கள், முன்பள்ளி ஆசிரியர்களை அவர்களே நியமிக்கின்றனர். வேதனம் வழங்குகின்றார்கள், போதாக்குறைக்கு முன்பள்ளி சிறார்களுக்கு சிவில் பாதுகாப்பு சின்னம் பொறிக்கப்பட்ட உடைகளை கூட வழங்கியிருக்கின்றார்கள்.
இது இராணுவத்தின் மேலாதிக்க செயற்பாடு. எந்த வகையிலும் இதனை நாம் அனுமதிக்க முடியாது யார் என்ன சொன்னாலும் இராணுவம் வெளியில் போக வேண்டும் என ஏற்பாட்டாளர்களால் வலியுறுத்தப்பட்டது.