இம்முறை ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அரச தரப்பு தூதுக்குழுவினர் புலம்பெயர் சமூகத்தினரை பாரிய அளவில் கவருவதற்கு இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டதைக் காண முடிந்தது.
குறிப்பாக இம்முறை கூட்டத் தொடரிலும் உப குழுக்கூட்டங்களிலும் கலந்து கொண்ட புலம்பெயர் அமைப்புக்களான பிரிட்டன் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, சுவிஸ் தமிழ் பேரவை, உலக தமிழர் மனித உரிமை மையம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மங்கள சமரவீர நீண்ட நேரம் உரையாடியிருந்தார்.
உலக தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளாருடனும் அமைச்சர் சமரவீர
இம்முறை கூட்டத் தொடரில் பல தடவைகள் பேச்சு நடத்தியிருந்தார். கடந்த புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தையடுத்து உலக தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் உடன் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் விஜேதாச ராஜபக்ஷவும் மூடிய அறைக்குள் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அது மட்டுமன்றி மேலும் பல்வேறு புலம்பெயர் அமைப்புக்களுடனும் இலங்கை தூதுக்குழுவினர் தொடர்ச்சியாக சந்திப்புக்களை நடாத்தியமையை காண முடிந்தது.