ஈராக்கின் பலூஜா நகருக்கு அருகில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழு ஆயுததாரிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வாகனத் தொடரணி ஒன்று வான் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பலூஜா நகரை மீட்ட அரச படையினரின் தாக்குதலில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற ஜிஹதிக்களே இவ்வாறு கொல்லப்பட்டதாக ஈராக்கிய பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
சிரிய எல்லையை ஒட்டி இருக்கும் ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதிக்கு தப்பிச் சென்றுகொண்டிருந்த இவர்கள் மீது ஈராக் விமானப்படை விமானங்கள் குண்டுகளை போட்டதாக ஈராக் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். தாக்குலுக்கு இலக்கான வாகனங்கள் தீயில் கருகி இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தலைநகர் பக்தாதில் இருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் பலூஜா நகரை மீட்டதாக ஈராக்கிய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. பாதுகாப்பு படையினர் மற்றும் அதனுடன் கூட்டணி சேர்ந்த ஆயுததாரிகள் கடந்த ஐந்து வாரங்கள் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைக்கு பின்னரே நகரம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஈராக் படையினரின் தாக்குதலால் தப்பி ஓடிய பெரும் எண்ணிக்கையிலான ஐ.எஸ் போராளிகள் அல் ருவைலா பகுதியில் ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் ஈராக்கின் மேற்கு பாலைவனப் பகுதி ஊடாக சிரிய எல்லையை ஒட்டிய ஐ.எஸ் கட்டுப்பாட்டு நகரான அல் கைமுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக ஈராக் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் உளவுப்பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து ஈராக் விமானப்படை போர் விமானங்கள் அம்ரியாத் அல் பலூஜா நகரில் சென்று கொண்டிருந்த குறித்த வாகனத் தொடரணி மீது செவ்வாயன்று கடும் தாக்குதல்களை நடத்தியதோடு பல ஆயுததாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல்களில் உயிர்தப்பியவர்கள் அருகில் இருக்கும் ரஸ்ஸாஸா மற்றும் ஹப்பானியா ஏறிகள் ஊடே தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே இவ்வாறு தப்பிச்செல்லும் ஆயுததாரிகள் தெற்கு நகரான கர்பலாவில் ஷியா புனிதத்தலங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பதாக குறிப்பிட்டு அந்நாட்டின் பலம்மிக்க ஷியா ஆயுதக் குழுவொன்று தமது போராளிகளை அங்கு அனுப்பி இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.