அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் இந்த வழக்கு நாமல் ராஜபக் ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக் ஷி டயஸினால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
1954 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க இலஞ்ச ஊழல் விசாரணை சட்டத்தின் 20 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக ஆணைக்குழுவை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ, விசாரணை ஒன்றுக்கு வாக்குமூலம் பெறுவதற்காக வருகை தருமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பலமுறை அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர் அதனை புறக்கணித்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் நாமல் ராஜபக் ஷவை நீதி மன்றுக்கு அழைத்து பொருத்தமான நடவ டிக்கையை அவருக்கு எதிராக எடுக்குமாறு வழக்கில் கோரப்பட்டுள்ளது.