துருக்கிய இஸ்தான்புல் நகரிலுள்ள அதாருர்க் சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பின்னிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதல்களில் 13 வெளிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 41 பேர்
பலியானதுடன் 239 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 50 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக துருக்கிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 தற்கொலைக் குண்டுதாரிகள் ஒருங்கிணைந்து தாக்குதலை நடத்தியதையடுத்து அந்த விமான நிலையமெங்கும் இரத்த வௌ்ளத்தில் சடலங்கள் சிதறிக் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
மேற்படி தாக்குதலின் போது முதலாவது தற்கொலைக் குண்டுதாரி விமான நிலைய மண்டபத்துக்குள் பிரவேசிப்பதற்கான கதவொன்றுக்கு அருகில் வெடிபொருட்களை வெடிக்க வைத்துள்ளார்.
தொடர்ந்து ஏனைய இரு தற்கொலைக் குண்டுதாரிகள் விமான நிலைய கட்டடத்துக்குள் ஊடுருவி குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர்.
மேற்படி தாக்குதலில் பலியானவர்களில் அநேகர் துருக்கிய பிரஜைகளாவர். அத்துடன் இந்த சம்பவத்தில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஐவரும் ஈராக்கைச் சேர்ந்த இருவரும் தியூனிஷியா, உஸ்பெகிஸ்தான், சீனா, ஈரான், உக்ரேன் மற்றும் ஜோர்தானைச் சேர்ந்த தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோராத போதும் ஐ.எஸ். தீவிரவாதிகளே மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளதாக தோன்றுவதாக அந்நாட்டுப் பிரதமர் பினாலி யில்டிறிம் கூறினார்.
தாக்குதல்தாரிகள் விமான நிலையத்துக்கு வாடகைக் காரொன்றில் வந்ததாக அவர் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் அண்மையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் அல்லது குர்திஷ் பிரிவினைவாதிகள் உரிமை கோரியிருந்தனர்.
இந்நிலையில் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட பிரதான தாக்குதல் ஒன்றாக உள்ளதாக கூறப்படுகிறது.
விமானநிலையத்தின் வெளியேறும் மண்டபத்தில் சிதறி ஓடிக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவர் ஓடும் காட்சியை வெளிப்படுத்தும் காட்சி விமான நிலைய கண்காணிப்பு காணொளி புகைப்படக்கருவிகளில் பதிவாகியுள்ளது.
அந்த தற்கொலைக் குண்டுதாரி பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு நிலத்தில் சுமார் 20 செக்கன்கள் நேரம் விழுந்து கிடப்பதையும் தொடர்ந்து அவர் குண்டை வெடிக்க வைப்பதையும் மேற்படி காணொளிக் காட்சி வெளிப்படுத்துகிறது.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் வாடகைக் கார்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த விமான நிலையத்தில் தாக்குதலையடுத்து காணாமல்போனவர்களைத் தேடி அவர்களது உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே கண்ணீருடனும் பதற்றத்துடன் கூடியிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் போதிய தகவல்கள் வழங்கப்படாமை குறித்து சில உறவினர்கள் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதாருர்க் விமான நிலையம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய ஒரு விமான நிலையமாக நீண்ட காலமாக கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
அந்த விமான நிலையத்தின் நுழைவாயிலில் எக்ஸ்ரே ஊடுகாட்டும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த போதும், கார்களுக்கான பாதுகாப்பு பரிசோதனைகள் வரையறுக்கப்பட்டதாக இருந்து வருகிறது.
மேற்படி தாக்குதலையடுத்து விமான நிலையமெங்கும் சடலங்களும் கண்ணாடித் துண்டுகளும் கைவிடப்பட்டிருந்த பயணப் பொதிகளும் சிதறிக் கிடந்ததால் அந்த நிலையம் ஒரு யுத்த களம் போன்று காட்சியளித்தாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி தாக்குதலானது தீவிரவாத குழுக்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக உள்ளதாக துருக்கிய ஜனாதிபதி தாயிப் எர்டோகன் தெரிவித்தார்.
“இன்று இஸ்தான்புல்லில் குண்டுகள் வெடித்துள்ளன. இந்த நிலை எதிர்காலத்தில் உலகமெங்குமுள்ள நகர்களிலுள்ள எந்தவொரு விமான நிலையத்திலும் இடம்பெறலாம்” என அவர் கூறினார்
மேற்படி தாக்குதலை வெறுக்கத்தக்க தாக்குதலொன்றாக குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, துருக்கிக்கு உதவி வழங்க உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜேர்மனிய உள்துறை அமைச்சர் தோமஸ் டி மெய்ஸியர் தெரிவிக்கையில், இது கோழைத்தனமான மிருகத்தனமான தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி தாக்குதலையடுத்து அந்த விமான நிலையத்துக்கான அனைத்து விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. எனினும் மறுநாள் புதன்கிழமை விமான நிலையத்திலான விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. எனினும் விமான சேவைகளில் மூன்றிலொரு பகுதி சேவைகள் இரத்துச் செய்யப்பட்டும் பல விமான சேவைகள் தாமதத்தை எதிர்கொண்டும் இருந்ததாக அந்த விமான நிலைய தகவல் காட்சிப் பலகைகள் தெரிவிக்கின்றன.
அதாருர்க் விமான நிலையமானது ஐரோப்பாவின் மூன்றாவது சுறுசுறுப்பான விமான நிலையமாக விளங்குகிறது. கடந்த ஆண்டில் அந்த விமான நிலையம் 61.3 மில்லியன் பயணிகளுக்கு சேவையாற்றியுள்ளது.
Home
உலகச்செய்திகள் துருக்கி விமான நிலையத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் 41 பேர் பலி; 239க்கும் அதிகமானோர்...