வல்வெட்டித்துறை காவல்துறை நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் தாக்குதலுக் குள்ளான இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் பாடசாலை வீதி இமையாணன் உடுப்பிட்டியைச் சேர்ந்த நற்குணம் நிசாந்தன் (வயது 22) என்பவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு முன்னால் நின்ற இளைஞனை மேற்குறித்த போக்குவரத்துப் காவல்துறை பொறுப்பதிகாரி (SI) தொலைபேசி ஒன்று சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்து அழைத்துச் சென்று மாலை 6 மணிவரையில் காவல்துறை நிலையத்தில் வைத்து இளைஞனைத் கடுமையாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசியில் ஒருவருடன் பேசுவதும் பின்னர் இளைஞனைத் தாக்குவதுமாக அப் காவல்துறை ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இளைஞனின் தலை, கன்னம் ஆகிய பகுதிகளில் காயமேற்பட்டுள்ளது. கைகளைப் பிடித்து முறுக்கியதால் கைசோர்வாக உள்ளதாக தெரியவருகிறது.
மாலை 6 மணிக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் வீடு வந்து சேர்ந்த இளைஞர் தலைசுற்று, மயக்கம் வரவே அன்று இரவு 10.30 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவரை பெற்றோர் அனுமதித்தனர்.
அவருக்கு வாயினால் இரத்தம் வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற வல்வெட்டித்துறை காவல்துறை அவர்களுடன் சமரசம் செய்ய முற்பட்டதாகவும், அதுமுடியாததால் திரும்பிச் சென்றதாகவும் தெரியவருகிறது.
தலைப்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மேலதிக பரிசோதனைக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை 11 மணியளவில் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் இளைஞன் ஏற்கெனவே இப்பொலிஸ் அதிகாரியினால் அச்சுறுத்தப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். மேலும் தமது மகன் தாக்கப்பட்டமை தொடர்பில் பெற்றோரினால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.