முல்லைத்தீவில் பெருமளவில் அரச காணிகளை கோரும் சிவில் பாதுகாப்பு திணைக்களம்!

0
485

mullaitivuபண்ணை அமைப்பதற்காக 524 ஏக்கர் அரசகாணியை வழங்குமாறு சிவில் பாகாப்புத் திணைக்களத்தினரால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே பல இடங்களிலும் பாதுகாப்புப் படையினரும், சிவில் பாதுகாப்புப் படையினரும் அரச மற்றும் தனியார் காணிகளை பெருமளவில் ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற நிலையில் தற்போது பண்ணை அமைப்பதற்காக மேலும் பல காணிகளை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவில் அனுமதி பெறப்பட வேண்டிய காணிகளின் விபரம் எனும் தலைப்பில் பாதுகாப்பு படைகளுக்காக வழங்கப்படவுள்ள காணிகளின் விபரம் எனக் குறிப்பிட்டு 13 இடங்களில் இவ்வாறு காணிகளை வழங்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இவற்றில் பதினொரு இடங்களில் பண்ணை அமைப்பதற்காகவும் ஏனைய இரண்டு இடங்களில் இலவச கல்வி நிலையங்களை அமைப்பதற்காகவும் காணிகள்  தேவையென  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 இதன்படி முல்லைத்தீவில் பண்ணை அமைப்பதற்காக விஸ்வமடு கிழக்கில் 65 ஏக்கரும், விஸ்வமடு மேற்கில் 25 ஏக்கரும், வேணாவிலில் 215 ஏக்கரும், புதுக்குடியிருப்பு மேற்கில் 15 ஏக்கரும் உடையார் கட்டு வடக்கில் 9 ஏக்கரும், சுதந்திரபுரத்தில் 8 ஏக்கரும், உடையார் கட்டு தெற்கில் 75 ஏக்கரும் என அரச காணிகள் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், உடையார் கட்டு தெற்கில், 10ஏக்கர், தேவிபுரத்தில் 100 ஏக்கர், தேராவிலில் 5 ஏக்கர், வள்ளிபுனம் பகுதியில் 2 ஏக்கர் அரசகாணிகள் என பதினொரு இடங்களில் சிவில் பாகாப்புத் திணைக்களத்தினால்  கோரப்பட்டுள்ளது.
அதேவேளை இலவச கல்வி நிலையம் அமைப்பதற்காகவும உடையார்கட்டு வடககில் 2 ஏக்கர் அரசகாணியும், உடையார்கட்டு தெற்கில் 1 1/4 ஏக்கர் காணியும் என  3 1/4 ஏக்கர் காணி கோரப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் பரிசீலனைக்காக மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டத்தில் சொந்தக் காணிகளில் குடியமர முடியாமல் தற்போதும் மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் சிவில் பாதுகாப்பு படையினரால் இவ்வாறு காணிகள் கோரப்பட்டுள்ளமைக்கு மாவட்ட மக்கள் கடும் விசனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here