ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத் தொடரில் இன்று புதன்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகளின்
மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் தனது அறிக்கையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டதும் இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகும்.
அதன் பின்னர் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்பான தமது கருத்துக்களையும் யோசனைகளையும் வெளியிடவுள்ளன. அதன் பின்னர் இலங்கையின் சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமை பேரவையில் உரையாற்றவுள்ளார். இதன்போது ஏற்கனவே உத்தியோகபூர்வபற்றற்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது என்பது தொடர்பாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார். எனினும் அந்த அறிக்கை நேற்றைய தினம் உத்தியோகபூர்வ பற்றற்ற முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 30 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் 18 ஆவது பரிந்துரையானது இவ்வாறு வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகின்ற நிலையில் அரசாங்கமும் இதனை முழுயைமாக அமுல்படுத்த தயார் என கூறிவருகின்றது.
அந்தவகையில் இன்றைய தினம் சிறிலங்கா அரசாங்கம் உள்ளக விசாரணை பொறிமுறையில் அடையப்பெற்றுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் பேசவுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளது.