யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த பொது மக்களின் காணிகள் நேற்றுமுன்தினம் மூன்றாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட நிலையில் காணி உரிமையாளர்கள் நேற்றைய தினம் சென்று தமது காணிகளை பார்வையிட்டு அடையாளப்படுத்தினர். இதேவேளை காணியுரிமையாளர்கள் தமது காணிகள் தொடர்பான பதிவுகளை அந்தந்த கிராமசேவகர் பிரிவுகள் ஊடாக விரைவில் மேற்கொள்ள வேண் டும் என தெல்லிப்பழை பிரதேச செயலர் சிறிமோகன் தெரிவித்துள்ளார்.
கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக வலிவடக்கில் இருந்த மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறியிருந்தனர். இவ்வாறு வெளியேறிய மக்கள் உறவினர் வீடுகளிலும் தற்காலிக நலன்புரி நிலையங்களிலும் தற்போது வரை வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கட்டம் கட்டமாக காணிவிடுவிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இரண்டு கட்டங்களாக காணிவிடுவிப்புக்கள் இடம்பெற்றநிலையில் நேற்றமுன்தினம் மூன்றாம் கட்டமாக 201.3 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.
அதற்கமைய வலி.வடக்கில் உள்ள ஜே 233, ஜே 234, ஜே 235, ஜே 236, குரும்பசிட்டி ஜே -238, கட்டுவன் ஜே-242, மற்றும் வறுத்தலை விளான் ஜே 241 ஆகிய பகுதிகளில் உள்ள 201.3 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டன.
குறிப்பாக வல்லை, தெல்லிப்பழை, அராலி வீதியூடான 126.18 ஏக்கர்களும் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அண்டியதான 63 ஏக்கர்களும் மற்றும் தெல்லிப்பழை 18ஆவது சிங்கரெஜினோ படை முகாமை அண்மித்த 12ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 201.3 ஏக்கர் காணிகள் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளன.
இக் காணி விடுவிப்பின் ஊடாக காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அண்டியதான பகுதிகள் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இக் காணி மீள் கையளிப்பின் ஊடாக பொன் பரமானந்தன் வீதியின் ஊடாக கட்டுவன் வரையான வீதியும் மல்லாகம் கட்டுவன் வீதியும் மற்றும் பொன்பரமானந்தன் மல்லாகம் இணைப்பு வீதியும் மக்கள் பாவனைக்கு மீள கிடைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை காணிகள் நேற்று முன்தினம் மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் அவர்கள் தமது காணிகளை உடனடியாக சென்று பார்வையிடுவதற்கு இராணுவம் அனுமதி மறுத்திருந்தது. அத்துடன் வடமராச்சியையும் தெல்லிப்பளையையும் இணைக்கின்ற வீதிகளும் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்ட காணிகளை சென்று பார்வையிடவும் அவற்றை துப்புரவு செய்யவும் காணியுரிமையாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதித்திருந்தனர்.
இதேவேளை தமது காணிகளை அடையாளம் கண்ட உரிமையாளர்கள் முன்னர் கட்டப்பட்டிருந்த வீடுகள் முற்றாக அழிவடைந்ததையும் சேதமடைந்த வீடுகளையும் பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தனர்.
மேலும் பலரது வீடுகள் மீது பாரிய மரங்கள் வீழ்ந்து வீடுகள் பாரியளவில் சேதமடைந்திருந்ததுடன் வீடுகளுக்குள்ளேயும் பாரிய மரங்கள் வளரந்திருந்தன. இதேவேளை குறித்த பகுதியில் மரங்கள் பற்றைக்காடுகளாக வளர்ந்திருந்தமையால் தமது வீடுகள் எங்குள்ளன என்ற அடையாளமே தெரியாமல் சிலர் தேடிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமது வீடுகளுக்கும் கிராமங்களுக்கும் காவலாக சிறு ஆலயங்கள் அமைத்து வழிபட்டு வந்த ஆலயங்கள் இடமாற்றப்பட்டும் சில ஆலயங்கள் இடிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.
இதேவேளை காங்கேசன்துறை பேரூந்துதரிப்பு நிலையமானது 27 வருடங்களிற்கு பின்னர் சொந்த இடத்திற்கு சென்றுள்ளது. குறிப்பாக காங்கேசன்துறைக்கான பேரூந்து சேவையானது படிப்படியாக மீள கையளிக்கப்பட பகுதியான மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் வரையே முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அன்மையிலுள்ள பழைய பேரூந்து தரிபிடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்கு அண்மையில் நீண்டகாலம் காணப்பட்டிருந்த இருந்த இராணுவ சோதனை சாவடிகளும் காவலரன்களும் நேற்றையதினம் முற்றாக நீக்கப்பட்டிருந்தன. இதனூடாக விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மக்கள் எந்தவிதமான சோதனை நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தாது செல்லக்கூடிய நிலமை ஏற்பட்டுள்ளது.