முன்கூட்டியே வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை!

0
286

Zeid Ra'ad Zeid al-Hussein, United Nations High Commissioner for Human Rights at the Twenty-Seventh session of the Human Rights Council. 8 September 2014. UN Photo / Jean-Marc Ferré

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை ஐ.நா இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜெனிவாவில் தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக வரும் 28ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.

இதன் போது, கடந்த ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த வாய்மூல அறிக்கை நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இணையத்தளத்தில் வெளியிடப்படலாம் என்றும் இது ஒரு வழக்கத்துக்கு மாறான நடவடிக்கை என்றும் ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, இந்த அறிக்கை முன்கூட்டியே வெளியிடப்படுவதன் மூலம் உறுப்பு நாடுகள் தமது அவதானிப்புகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது வாய்மூல அறிக்கையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், குறைபாடுகள் குறித்தும் சுட்டிக்காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here