ராஜபக்சவுக்கு மன்னிப்பே கிடையாது. அவர் செய்த கொலைகளுக்கு தண்டனை அளித்தே தீர வேண்டும் என்று வைகோ காட்டமாக கூறினார்.
முல்லை பெரியாறு அணையில் தமிழக உரிமைக்காக போராடியதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஏழு மாவட்ட செயலாலர்களால் மதுரையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதற்காக, மாநாடு நடத்துவதுபோல் பிரமாண்ட ஏற்பாடுகளை ம.தி.மு.க.வினர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மதுரை நகர் செயலாளர் பூமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் விஜயகுமார், முல்லைப்பெரியாறு அணையின் வரலாற்றையும் தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களையும் பேசியவர், அணையை மீட்க தங்கள் சங்கம் எடுத்த முயற்ச்சிக்கு உதவ தமிழகத்தில் எந்த கட்சியும் முன்வராதபோது வைகோ மட்டும் தான் உதவியாக இருந்தார். அவரைப் போன்றவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பாமல் பணம் கொடுத்தவர்களுக்கு ஓட்டு போட்டு விட்டீர்களே என்றார்.
கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் பேசும்போது, ”இன்று தென்மாவட்ட மக்கள் குடிக்கும் தண்ணிருக்கு காரணம் வைகோ தான். அவர் தான் முல்லை அணையின் காவல் தெய்வம்” என்று உணர்ச்சிகரமாக பேசினார். அதன்பின் வைகோவிற்கு ஆளுயர மாலையும், தங்க வீர வாள், பெண்ணி குயிக் சிலையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வைகோ பேசும்போது, ”முல்லைப் பெரியாறு அணைக்கு ஈடாக தொழில்நுட்ப ரீதியாக உலகில் எந்த அணையும் கட்டப்படவில்லை. அணையின் நீர் மட்டத்தை உயர்த்தினால் அணை உடையும். மக்கள் அழிவர், என அணைப் பகுதியில் ஆக்கிரமித்துள்ளவர்கள் பொய் பிரசாரம் செய்து கேரள மக்களை நம்ப வைத்தனர். தற்போது அணைக்கு தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர். பதிவேட்டில் கையெழுத்திட்டுச் செல்லுமாறு வனத் துறையினர் நிர்பந்திக்கின்றனர். இப்பிரச்னையில் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? நம்முடைய உரிமையை இழந்து கொண்டிருக்கிறோம்.
தமிழக மக்களை பொருளாதார ரீதியாக ஒழிக்க திட்டமிட்டுள்ளனர். நம்மைச் சுற்றிலும் ஆபத்து சூழ்ந்துள்ளது. சோலார் மின்சார திட்டத்திற்கு விவசாய நிலத்தை விற்காதீர்கள். தஞ்சாவூர் பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை ஏற்கனவே மத்தியில் ஆட்சிபுரிந்த ஐ.மு. கூட்டணி அரசு அனுமதித்தது. இதற்கு முந்தைய தி.மு.க. ஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார். இத்திட்டத்தால் தமிழகம் அழிந்துவிடும் என்ற கவலை உள்ளது. இதில், அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கோரி கடிதம் எழுதியுள்ளேன். போராட்டத்திற்கு தயாராவோம். மீத்தேன் திட்டத்திற்கு எதிராக இத்தாலியில் போராடுகின்றனர். மீத்தேன் திட்டத்திற்கு நியூயார்க் கவர்னர் தடை விதித்துள்ளார்.
வளர்ச்சித் திட்டங்களுக்கு வைகோ எதிரி என்கின்றனர். என்னை விற்க நான் தயாரில்லை. தமிழகத்தில் முதல்வர் பதவி போட்டியில் பலர் உள்ளனர். பதவியை நான் விரும்பவில்லை. 2015 டிசம்பருக்குள் மதுக்கடைகளை மூடுவது பற்றி தமிழக அரசு முடிவெடுக்காவிடில், அவற்றை இயங்கவிடாமல் செய்வோம். மதுவை மறந்தால் தான் இளைஞர்கள் போராட முடியும்.
இலங்கை அதிபராக வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேனா, அங்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அனுமதித்து உண்மை நிலையை அறியச் செய்ய வேண்டும். ராஜபக்சேவிற்கு மன்னிப்பே இல்லை. அவர் செய்த கொலைகளுக்கு தண்டனை அளித்தே தீரவேண்டும்” என்றார்.