வடக்கிற்கான விசேட பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் அமைப்பதற்கு ஐந்து இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து ஒன்றை தெரிந்தெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், காணிப்பிரச்சினைகளை காரணம் காட்டி இத் திட்டத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் கைவிடவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக விசேட பொருளாதார வலயமொன்றை வவுனியாவில் முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. எனினும் தாண்டிக்குளத்தில் இந்த வலயத்தை முன்னெடுப்பதால் விவசாயக் காணிகள் பாதிக்கப்படும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் சூழல் பாதிப்புகள் பல ஏற்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
விசேடமாக வடமாகாண முதலமைச்சர் இவ் விடயம் தொடர்பில் கவனத்தை செலுத்தி மாற்றிடத்தில் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார். அதன்பின்னரான காலப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயத்திற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு அவ் விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிட்டுள்ளது.
அத்தோடு பொருளாதார வலயம் அமைப்பதற்கு ஏதுவான ஐந்து இடங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோன்று பேராசிரியர் பசுபதி சிவநாதனும் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் தற்போது வரையில் பொருளாதார வலயத்தை முன்னெடுப்பதற்கான காணியை அடையாளம் காணாது இழுத்தடிக்கும் நிலைமையே நீடித்துக் கொண்டிருக்கின்றது.
விசேடமாக வடக்கு முதல்வர் இவ் விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எடுத்துரைத்து கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். எனினும் தற்போது வரையில் அது குறித்து எந்த முடிவுகளும் எடுக்கப்படாதிருக்கின்றது. காணிப்பிரச்சினையை காரணம் காட்டி குறித்த செயற்திட்டத்தை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அரசாங்கம் அவ்வாறான முயற்சிகளை கைவிட வேண்டும்.
Home
ஈழச்செய்திகள் வடக்கிற்கான விசேட பொருளாதார மத்திய நிலையத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் கைவிடவேண்டும்: