இலங்கையில் ஈழத் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ புதிய அதிபர் சிறிசேனா வழி ஏற்படுத்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- இன்னொரு நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஒருவர் தோல்வி அடைந்தது கண்டு மகிழ்ச்சி கொள்வது நாம் பின்பற்றி வரும் நாகரிகத்துக்கு ஏற்புடையது அல்ல. எனினும், நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களை வேட்டையாடிய ராஜபட்ச தோல்வி அடைந்திருப்பது நமக்கு ஒருவகை நிறைவைத் தருகிறது என்பதால் வரவேற்கலாம்.
இந்தத் தோல்வியின் மூலம் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இனப்படுகொலை, மனித உரிமை மீறல், போர்க்குற்றங்களுக்கு தக்க தண்டனை தரப்படும்போது தான் இயற்கை நீதி முழுமை பெறும். கடந்த காலங்களில் எல்லா சர்வாதிகாரிகளுக்கும் ஏற்பட்ட தவிர்க்க முடியாத முடிவு, சாகாத படிப்பினையாக சரித்திரத்தில் பதிவாகியிருக்கும்.
பெரும்பான்மை சிங்கள இன வெறியோடு, ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரச் சேட்டைகளை நடத்திய ராஜபட்சவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியால் உலகெங்கும் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழர்கள், சிறுபான்மையினரின் பெருவாரியான வாக்குகளால் வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபாலா சிறிசேனா பொறுப்பேற்றுள்ளார்.
தனது வெற்றிக்கான காரணத்தை மறக்காமல் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபாடின்றி அனைவரும் சமம் என்ற நிலையை அவர் பேண வேண்டும். உண்மையான நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு வழி திறக்கவும், சமத்துவம், சமதர்மம், சமாதான சகவாழ்வு பேணவும், அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை அமல்படுத்தவும் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈழத் தமிழர்கள் அனைத்து உரிமைகளுடன் கண்ணியத்துடன் வாழவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறவும் சிறிசேனா வழி ஏற்படுத்த வேண்டும்.
தமிழர் பகுதிகளை சிங்களமயமாக்கும் முயற்சியை தடுக்கவும், தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகம் திரும்பி அமைதியாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கவும் புதிய அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. விசாரணைக் குழுவை அனுமதிக்கவும், வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரங்களை வழங்கவும், சிங்களத்துக்கு இணையாக தமிழை ஆட்சி மொழியாக்கவும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
1950 ஆம் ஆண்டிலிருந்து ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் இயக்கம் தி.மு.க. என்ற முறையில் இதனை வலியுறுத்துகிறேன். இனியாவது ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு விடியல் வெளிச்சம் ஏற்படத் தொடங்கும் என நம்புவோம்” என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.