கடந்த காலங்களில் எத்தனை ஊடகவியலாளர்களை கொலை செய்தீர்கள். ஆனால் இன்று மரண அச்சுறுத்தல் தொடர்பாக பேசுகின்றீர்கள் என ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நீங்கள் எதிர்க்கின்றீர்களா? அல்லது அதனை ஆதரிக்கின்றீர்களா என்றும் எதிர்கட்சியினரை பார்த்து ரணில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை மக்கள் தீர்வொன்றுக்கு அல்லது தேர்தலொன்றுக்கான காலக்கெடுவின்போது இலத்திரனியல் மற்றும் அரச ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்க நெறிகள் அல்லது வழிபாட்டு நெறிகள் தொடர்பான சட்டத்தை அங்கீகரித்துக் கொள்வதற்கான சட்டமூலத்தை சபையில் முன்வைத்து உரையாற்றும் போதே ரணில் இவ்வாறு தெரிவித்தார்.
இச் சட்டமூலம் தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. அனைவரும் இதனை வரவேற்கின்றனர். தேர்தல்கள் நடைபெறும் காலங்களில் ஊடகங்களில் விளம்பரங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன. எனவே இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளால் சிலருக்கு அநீதி ஏற்படுகின்றது.
நாட்டில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தவே இவ்வாறான ஒழுக்க நெறிகள் கொண்டு வரப்படவுள்ளன. இதனால் எதிர்த்தரப்பினர் அனைவரும் இதற்கு தமது ஆதரவை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.