இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள விடயங்கள் செயற்படுத்தப்படவில்லையென்றும், இலங்கையில் நடைபெறும் விடயங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அமையவில்லையென்றும் குறிப்பிட்டு, ஐ.நா மனித உரிகைள் ஆணையாளருக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரிமார் ஆணைக்குழு உள்ளிட்ட ஆறு அமைப்புகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளன.
இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பில், தற்போது கசப்பான சமிக்ஞைகளே வெளிப்பட்டு வருவதாக குறித்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்தோடு, இலங்கையில் தற்போது நடைபெறும் விடயங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் கைதுகள் இடம்பெறுகின்றமை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட பலர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை, காணாமல் போனோர் தொடர்பில் உரிய தீர்வு எட்டப்படாமை போன்ற விடயங்கள் அதில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.சர்வதேசத்துடனான உறவுகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளபோதும், அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் தொடர்ந்தும் இடம்பெறுவதாக குறித்த அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.
இலங்கையின் இணை அனுசரணையுடன் கடந்த வருடம் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் உள்ள விடயங்கள் செயற்படுத்தப்பட்ட விதம் மற்றும் அதன் முன்னேற்றங்கள் உள்ளடங்களான வாய்மூல அறிக்கையொன்றை, எதிர்வரும் 29ஆம் திகதி ஐ.நா ஆணையாளர் மனித உரிமை பேரவையில் வெளிப்படுத்தவுள்ளார். இது இவ்வாறிருக்க, இலங்கை மீதான சர்வதேச அமைப்புகளின் விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, இறுதிக்கட்ட யுத்தத்தில் போர் விதிமுறைகள் மீறப்பட்டமைக்கான ஆதார புகைப்படங்களும் தற்போது சர்வதேச ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தவண்ணமுள்ளன. இந்நிலையில், இம்முறை வெளியிடப்படவுள்ள அறிக்கை மூலம் இலங்கைக்கு பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.