கைகேயி விட்ட தவறை பரதனாவது நீக்கவேண்டும்!

0
757

LTTE1

இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன. அயோத்தி மாநகரம் முழுவதும் விழாக்கோலம். தசரத மைந்தனுக்கு பட்டாபிஷேகம் நடப்பதைக்காண ஆவலுடன் மக்கள் காத்திருக்கிறார்கள். எனினும் அயோத்தி மாநகரில் இருவரோடு மூவருக்கு உறக்கம் இல்லை.
அதென்ன! இருவரோடு மூவர் என நீங்கள் கேட்கலாம். ஆம்; இருவர் கைகேயியும் அவள் தோழி கூனியும். மூன்றாவது நபர் தசரத சக்கரவர்த்தி. முன்னைய இருவரும் இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்துவிடக் கூடாது என்பதால் உறக்கம் இழந்தவர்கள். தசரதனோ எப்பாடுபட்டும் இராமனுக்கு பட்டாபிஷேகம் நடத்திவிட வேண்டும் என்று நினைத்ததால் உறக்கம் இழந்தவன்.
எனவே வேறுபட்ட நினைப்பில் உறக்கம் இழந்தவர்களை ஒன்றுபடுத்தி மூவர் என்று உரைப்பது அழகல்ல என்பதால் இருவரோடு மூவர் என்று உரைத்தோம்.
இராமருக்கான பட்டாபிஷேகத்தைக்காண காத்திருந்த அயோத்தி மாநகர மக்களுக்கு ஏமாற்றம். தசரதனுக்குத் தோல்வி. தசரத மாளிகையில் இருந்த கைகேயி, கூனி தவிர்ந்த ஏனையவர்களுக்கு தீராக் கவலை.
என்ன செய்வது? கூனி இட்ட சூழ்ச்சியும் மனம்  மாறிய கைகேயியும் தங்கள் நினைப்பை அமுலாக்கும் பொருட்டு இராமனை வனவாசம் செல்லவைத்தனர்.
ஏதும் அறியாத இராமர் தன் பத்தினி சீதை, தம்பி இலட்சுமணன் சகிதம் காடேகிறார். தன் மூத்த மகன் இராமன் காடேகினான் என்ற செய்தி கேட்ட தசரதன் இறந்துபோகிறான். விழாக்கோலம் காண இருந்த அயோத்தி மாந கர் அமங்கலமாக காட்சி தருகிறது. இரண்டு பெண்கள் விழித்திருந்ததால் ஏற்பட்ட நாசம் இவை.
இப்போது பிறதேசம் சென்றிருந்த பரதனுக்கு தந்தையின் மரணச் செய்தி கிடைக்கப்பெறுகின்றது. பரதன் அயோத்திக்கு வருகிறான். அயோத்தி வந்த பரதன் நீதி – நியாயம் – நேர்மை என்பவற்றை துறந்திருப்பான் ஆயின் தன் தாய் கைகேயி போட்ட சூழ்ச்சிப்படி பட்டாபிஷேகம் செய்து அயோத்தி மாநகரை ஆண்டிருப்பான். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை.
இராமாயணத்தில் மிக உன்னதமான பாத்திரம் என்றால் இராமனைவிட அந்தப் பரதனே என்று  எடுத்துரைக்க முடியும். அந்தளவுக்குப் பரதன் நீதி உணர்ந்தவன்.
பரதன் நீதிக்குமாறாக நடந்திருப்பான் ஆயின் இராமாயணம் என்ற இதிகாசம் தலையயடுத்திருக்க முடியாது போயிருக்கும்.
ஆக கூனி சூழ்ச்சி செய்யலாம்; கைகேயி பிழைவிடலாம். ஆனால் பரதன் நீதி தவறாததால்தான் தர்மம் வெல்கிறது. எனவே இந்த மண்ணில் கைகேயிகளும் கூனிகளும் இருந்தாலும் பரதர்களும் இருந்தால் நீதி நிலைபெற்று தர்மம் தலைத்தோங்கும்.
எனினும் துரதிர்ஷ்டவசமாக எங்கள் தமிழ் மண்ணில் கூனிக்கு ஏற்ற கைகேயியும் கைகேயிக்கு ஏற்ற பரதர்களும் என்பதாக நிலைமை இருப்பதால் இன்னமும் வனவாசம் முடியாமல் தொடர்கிறது.
என்று பரதர்கள் புறப்படுகிறார்களோ அன்று தான் இராமர்களுக்கு விடிவுகிட்டும். பட்டாபிஷேகமும் நடக்கும்.

(Valampurii)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here