இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்ரிபால சிறீசேனவின் முதலாவது வெளிநாட்டு பயணம் இந்தியாவில்தான் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபக்சேவை தோற்கடித்து, புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவர் மைத்ரிபால சிறீசேன.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி, சிறீசேனாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பும் விடுத்தார். மோடியின் அழைப்பை சிறீசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கை புதிய அதிபரின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா இருக்கப்போகிறது என்று, மூத்த அரசியல்வாதியும், சிறீசேனவின் செய்தித் தொடர்பாளருமான ரஜிதா சேனரத்னே இன்று தெரிவித்தார். ராஜபக்சே ஆட்சி காலத்தில், சீனாவுடன், இலங்கை நெருக்கம் காண்பித்தது.
சீனாவுடன் உறவை துண்டித்துக் கொள்ள இந்திய அரசு கேட்டுக் கொண்டும், ராஜபக்சே அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இந்நிலையில்தான், புதிய அதிபர் சிறீசேனவை, இந்தியாவுடன் நெருக்கம்காட்டச் செய்ய பிரதமர் மோடி முயற்சி செய்துவருகிறார். அதற்கு முதலாவது பலன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.