பருத்தித்துறை வடமராட்சி கட்டைக்காட்டு கடற் பரப்பில் உள்ளூர் மீனவர்களின் வளங்களை சேதப் படுத்தியபடி கடலட்டை பிடிப்பதற்காக 65 படகு களில் வந்த 185 தென்பகுதி மீனவர்களை உள் ளூர் மீனவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதன்போது இரு பகுதியினருக்கும் இடையே ஏற்பட்ட சரமாரியான மோதலில் இரு உள்ளூர் மீனவர்கள் படுகாயம் அடைந்ததுடன் 15க்கு மேற்பட்ட படகுகள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பதற்றநிலை காணப்பட்டது.
பருத்தித்துறை வடமராட்சி கட்டைக்காட்டு கடற்பரப்பு பகுதியில் நேற்றைய தினம் மாலை முல்லைத் தீவு மாவட்டத்தில் இயங்கி வரும் கடலட்டை ஏற்றுமதி செய்யும் தனியார் தொழிற்சாலையை சேர்ந்த 185 தென்பகுதி மீனவர் கள் 65 படகுகளில் வந்துள்ளனர்.
இவர்கள் கடலட்டை மற்றும் சங்கு பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தினை பெற்றிருந்த போதிலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட விதிமுறைகளை மீறி வட மராட்சி பகுதியில் கடலட்டை பிடிக்கும் நட வடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகளினால் உள்ளூர் மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளுக்கு சேதம் ஏற்படுவதுடன் தொழிலை மேற்கொள்வதற்கும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்
இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த தென்பகுதி மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள வந்துள்ளதாக அறிந்த உள்ளூர் மீனவர்கள் தமது படகுகள் மற்றும் வலைகள் சேதமாக்கப்ப ட்டதனை அறிந்தவுடன் ஆத்திரம் அடைந்து குறித்த தென்பகுதி மீனவர்களை சிறைப்பிடிப்பதற்கு துரத்தி சென்றுள்ளனர்.
அதன்போது உள்ளூர் மீனவர்களை தென்பகுதி மீனவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இருபகுதியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்ட போது போது தென்பகுதி மீனவர்கள் சங்குகளால் உள்ளூர் மீனவர்கள் மீது எறிந்த போது 2 உள்ளூர் மீனவர்கள் காயமடைந்ததுடன் அவர்களின் படகுகளும் சேதமடைந்துள்ளன. மேலும் இரு பகுதியினருடைய 15க்கு மேற்பட்ட படகுகளும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் உள்ளூர் மீனவர்களால் தென்பகுதி மீனவர்கள் தப்பிச் செல்ல முடியாதவாறு முற்றுகையிடப்பட்டனர்.
குறித்த இடத்தில் நிலைமை மேலும் மோசமடைவதை அறிந்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், கடற்படையினர், பிரதேச செய லர், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கடற்தொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக சென்று மோதலை நிறுத்தி அவர்களுடன் கலந்துரையாடியதுடன் காயமடைந்த மீனவர்கள் உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தென்பகுதி மீனவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என உள்@ர் மீன வர்கள் விடாப்பிடியாக நின்றதனை அடுத்து இரு பகுதியினரையும் சமரசத்திற்கு அழை த்து குறித்த பிரச்சினை தொடர்பில் உரிய நட வடிக்கைகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் மீனவர்களுக்கு தெரிவித்ததை அடுத்து சுமார் 4 மணி நேரத்தின் பின்னர் பகுதி பகுதியாக குறித்த தென்பகுதி மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது..
கடற்தொழில் திணைக்களத்தில் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை பெற்று குறித்த தனியார் தொழிற்சாலை ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கி வருகின்றது. அந்த தொழிற்சாலையின் மீனவர்கள் உள்ளூர் மீனவர்களின் எல்லைக்குள் வந்து அவர்களின் படகுகள் வலைகளை சேதப்படு த்தியதாக கூறி இரு பகுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு பகுதியினருடனும் சமரசம் மேற்கொண்டதனால் குறித்த பகுதியில் சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த விடயம் தொடர்பாக 5 நாட்களுக்குள் அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று ஏற் பாடு செய்யவுள்ளோம். அக் கலந்துரையாடலில் கடற்படை அதிகாரிகள், பொலிஸார், நீரியல் வளத்துறை அதிகாரிகள், குறித்த தனியார் தொழிற்சாலை இயக்குனர், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மீனவ சங்க பிரதிநிதிகள் இணைந்து குறித்த பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி சரியான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.