ஜெனீவாவில் இன்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஆணையாளர் செயீட் ராத் அல் உசைன் இந்த கோரிக்யை விடுத்துள்ளார்.
47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இன்று முற்பகல் பத்து மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. யூலை முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரின் போது சிறிலங்கா தொடர்பில் யூன் 29 ஆம் திகதி வாய்மூல அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் செயீட் ராத் அல் உசைன் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று 32 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆணையாளர் உசைன், உலக நாடுகளின் மனித உரிமை நிலமைகள் தொடர்பில் குறிப்பிடுகையில் சிறிலங்காவின் நிலமைகளையும் குறிப்பிட்டார்.
இதன்போது கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழமையாக நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டங்களை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையில் அர்ப்பணிப்புடன் மாறுபட்ட வழிகளில் செயற்திட்டங்களை ஒருங்கிணைப்பதுடன் படிப்படியாக அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதில் சிறிலங்காவில் வாழும் அனைவரும் முழுமையான பங்களிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்தார்.
அதேவேளை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒவ்வொரு நாடும் கடமைப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணைகளை மேற்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான அரசியல் சாசன மாற்றங்களையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கக்கூடிய சூழலை உறுதிப்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுடனான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.