தேசிய அரசு அமைக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்படும் தகவலோ அல்லது அதில் இணையும்படி அழைப்பு எதுவுமோ தங்களுக்கு புதிய அரசுத் தலைமையிடமிருந்து இதுவரையிலும் கிடைக்கவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாகப் பதவியேற்கும் அமைச்சரவை பற்றிய ஊகச் செய்திகள் தற்சமயம் கொழும்பிலிருந்து பரவலாக உலாவருகின்றன.
அவற்றில் மொழிகள், சமூக ஒன்றிணைவு, மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்துக்கான அமைச்சர் பதவி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏம்.ஏ.சுமந்திரன் எம்.பிக்கு வழங்கப்படுகின்றது என்ற தகவலும் உள்ளடங்கியிருந்தது.
இது குறித்துக் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் “எங்களுக்கு அத்தகைய உத்தியோகபூர்வ அழைப்பு ஏதும் இதுவரை வரவேயில்லை. அதனால் அப்படி அரசில் இணைவதா, அமைச்சுப் பதவியை ஏற்பதா என்பன குறித்து ஆராய வேண்டிய தேவையும் எமக்கு ஏற்படவில்லை” என்றார் இரா.சம்பந்தன்.